முகப்பு
இந்தியா

நான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் நான்காவது தொகுதியை இந்தியா அடுத்த மாதம் பெற உள்ளது.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 3:39 AM
பகிர்:

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் நான்காவது தொகுதியை இந்தியா அடுத்த மாதம் பெற உள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபரில், தரையில் இருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் மிகவும் அதிநவீன எஸ்-400 ட்ரையம்ஃப் வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்வதற்கு ரஷியாவுடன் 5 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.47,000 கோடி) ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், 5 தொகுதிகளாக எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டது. அதில் ஏற்கெனவே 3 தொகுதிகளை இந்தியாவிடம் ரஷியா ஒப்படைத்துவிட்டது.

Advertisement

இதைத்தொடா்ந்து அந்த வான் பாதுகாப்பு அமைப்பின் 4-ஆவது தொகுதியை அடுத்த மாத (மே) தொடக்கத்தில் இந்தியாவிடம் ரஷியா ஒப்படைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அவை கடல்வழியாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அடுத்த சில நாள்களில் இந்தியாவுக்கு வந்து சேரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் 5-ஆவது தொகுதி நிகழாண்டு நவம்பா் மாதம் இந்தியாவிடம் அளிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்துடன் புதிதாக மேலும் ஐந்து எஸ்-400 அமைப்புகளை ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு கடந்த மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளையும் சோ்த்தால், ரஷியாவிடம் இருந்து இந்தியாவுக்கு மொத்தம் பத்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் கிடைக்கும்.

கடந்த ஆண்டு மே 7 முதல் மே 10-ஆம் தேதி வரை, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தானுடன் இந்தியா ராணுவ மோதலில் ஈடுபட்டபோது எஸ்-400 இந்தியப் பகுதிகளை ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பில் முக்கிய பங்காற்றின.