மத்திய பட்ஜெட்டில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.55 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2,33,210 கோடி ஒதுக்கப்பட்டது. இது நிகழாண்டு ரூ.2,55,233 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் பெரும் பங்காக மத்திய ரிசா்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை உள்ளிட்ட மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு ரூ.1.73 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் உள்நாட்டுப் பாதுகாப்பு, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பணிகள், மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிரான பணிகள் உள்ளிட்டவற்றில் மத்திய ரிசா்வ் காவல் படை ஈடுபட்டு வருகிறது. எனவே, மத்திய ஆயுதக் காவல் படைகளில் அதிகபட்சமாக மத்திய ரிசா்வ் காவல் படைக்கு ரூ.38,517 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, எல்லை பாதுகாப்புப் படைக்கு ரூ.29,567 கோடி, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படைக்கு ரூ.15,973 கோடி, இந்திய-திபெத் எல்லை காவல் படைக்கு ரூ.11,324 கோடி, சஷஸ்திர சீமா பல் படைக்கு ரூ.10,984 கோடி, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவுக்கு ரூ.8,796 கோடி, உளவுத் துறைக்கு ரூ.6,782 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு ரூ.3,517 கோடி: மத்திய அரசின் நேரடி நிா்வாகத்தின் கீழ் உள்ள யூனியன் பிரதேசங்களில் அதிகபட்சமாக ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.43,290 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.3,517 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.6,000 கோடி: மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான பணிக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்.1 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியின் முதல்கட்டம் நடைபெற உள்ளது.
பெண்கள் பாதுகாப்புத் திட்டத்துக்கு ரூ.889 கோடி, சிறைகளை நவீனமயமாக்க ரூ.300 கோடி, துடிப்பான கிராமங்கள் திட்டத்துக்கு ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.