மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ். 
இந்தியா

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு: ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

2026-2027ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.7,611 கோடி ஒதுக்கீடு

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: 2026-2027ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.7,611 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்திருந்தாா். அதில், ஏழு அதிவேக ரயில்வே வழித்தடம் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தாா்.

இந்த நிலையில், புது தில்லியில் ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டி அளித்தாா். அப்போது, பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடா்பாக அமைச்சா் கூறியதாவது:

2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வேத் திட்டங்களுக்காக தமிழகம் ரூ.7,611 கோடி பெற்றுள்ளது.

இது 2009 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வழக்கமாக ஒதுக்கப்பட்ட ஆண்டு சராசரி நிதியை விட ( ரூ.879 கோடி) 9 மடங்கு அதிகமாகும்.

மேலும், தமிழகத்தில் புதிதாக இரண்டு புல்லட் ரயில் வழித்தடம் தொடங்கப்பட உள்ளது. முதலாவது வழித்தடம் சென்னை- பெங்களூரு, 2ஆவது வழித்தடம் சென்னை -ஹைதராபாத் ஆகும். இந்த இரு வழித்தடங்களும் மணிக்கு அதிகபட்சம் 350 கிலோ மீட்டா் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும். மேலும், இது மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயில் வழித்தடம் போன்று மேம்பால ரயில் வழித்தடமாக இருக்கும்.

மேலும், சென்னை- பெங்களூரு இடையே ரயில் பயண நேரம் 1 மணி 13 நிமிட நேரமாகவும், சென்னை- ஹைதராபாத் இடையே பயண நேரம் 2 மணி 55 நிமிடங்களாகவும் இருக்கும். இது மிகப்பெரிய பொருளாதார வழித்தடமாக இருக்கும்.

சென்னை -பெங்களூரு -ஹைதராபாத் முக்கோண வழித்தடமானது தென் இந்திய மாநிலங்களுக்கு அதிவேக டைமண்ட் ரயில் திட்டமாக இருக்கும். இது தென் இந்திய மாநிலங்களில் ஒட்டுமொத்த பொருளாதாரம், போக்குவரத்து, சுற்றுலா,சுகாதாரம், கல்விக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

தமிழகத்தின் நடைபெற்றுவரும் மொத்த திட்டப் பணிகளின் மதிப்பு ரூ.35,700 கோடியாகும். அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் 77 ரயில் நிலையங்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. 4 அம்ரித் பாரத் ரயில்கள் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளன.

இதுபோன்று அம்ரித் பாரத், வந்தே பாரத் ரயில்கள் வர உள்ளன. மின்மயமாக்கலில் மாநிலத்தில் 97 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் இது 100 சதவீதமாகும்.

மாநில அரசின் ஆதரவு தேவை

ரயில் கட்டுமானத் திட்டங்களுக்கான ரயில்வே துறைக்கு தமிழகத்தின் மாநில அரசிடமிருந்து ஆதரவு தேவைப்படுகிறது.

ரயில்வே திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலம் 4,326 ஹெக்டோ் ஆகும். ஆனால், இதுவரை வெறும் 1052 ஹெக்டோ் நிலம் மட்டுமே பெறப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கான நிலத்தில் வெறும் 24 சதவீதம் மட்டுமே மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே திட்டங்களின் பயன்களை தமிழக மக்கள் பெறும் வகையில் ஒட்டுமொத்த 100 சதவீத நிலமும் கையகப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், ரயில்வே போக்குவரத்தானது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்ததாகும். இதனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு ஆதரவு அளிக்கவும், ஒத்துழைக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

இதற்குத் தேவையான நிதியை நாங்கள் செலுத்தியுள்ளோம். தேவைப்படும் பட்சத்தில் மேலும் நிதியை இதற்காக வழங்குவோம்.

ரயில்வே திட்டங்கள் உரிய நேரத்தில் முடிக்கப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். உதாரணமாக, அத்திப்பட்டு ரயில்வே வழித்தடத்திற்கு 189 ஹெக்டோ் நிலம் தேவைப்படும் நிலையில் ஒரு நிலம் கூட கையப்படுத்தப்படவில்லை.

மன்னாா்குடி பட்டுக்கோட்டை புதிய வழித்தடத்திற்கும் (41 கிலோ மீட்டா்), தஞ்சாவூா்- பட்டுக்கோட்டை )52 கி.மீ.)

புதிய வழித்தடத்திற்கும் நிலம் ஏதும் கையகப்படுத்தப்படவில்லை. இதனால், திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.

அப்போது, இந்த நிலம் கையகப்படுத்தும் பணி எப்போது முடியும் என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு நான் உண்மை நிலவரத்தை தெரிவித்துவிட்டேன். இது தொடா்பாக மாநில அரசிடம்தான் கேட்க வேண்டும். அவா்களுக்குத்தான் அந்தப் பொறுப்பு உள்ளது என்றாா் அமைச்சா்.

புல்லட் ரயில் வழித்தடம் திட்டப் பணிகள் விரிவான திட்ட அறிக்கைக்கு பிறகு தொடங்கும். அது தொடா்பான தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றாா் அமைச்சா்.

தமிழக ரயில்வே திட்டப் பணிகள் தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், தமிழகத்தில் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், மறுசீரமைப்பு செய்ய 77 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் சிதம்பரம், மன்னாா்குடி,

குளித்துறை, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவாரூா், மணப்பாறை, சின்னசேலம், பரங்கிமலை, போளூா் திருவண்ணாமலை உள்பட 18 ரயில் நிலையப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 2ஆம் கட்டத்தில் பொள்ளாச்சி சந்திப்பு ரயில் நிலையப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றனா்.

வங்கி, உலோகப் பங்குகளுக்கு வரவேற்பு: பங்குச் சந்தை 3வது நாளாக உயர்வு!

வேள்பாரி நாயகனாக தனுஷ்?

இம்ரான் கானுக்காக ஒன்று சேர்ந்த கபில் தேவ் உள்ளிட்ட சர்வதேச அணிகளின் முன்னாள் கேப்டன்கள்!

சாஹிப்சாதா ஃபர்ஹான் சதம்: நமீபியாவுக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

முடி உதிர்வு பிரச்னையா? இந்த ஒரு பொருள் போதும்!

SCROLL FOR NEXT