முகப்பு
இந்தியா

பிரதமா் சூரிய மின்சக்தி திட்டத்தில் 28 லட்சம் வீடுகள் பயன்: ரூ.16,000 கோடி நிதியுதவி

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 12:30 AM
சூரிய மின்சக்தி - file photo
பகிர்:

பிரதமா் சூரிய மின்சக்தித் திட்டத்தில் 28 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளதாகவும், அதற்காக ரூ.16,000 கோடி அளவுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மின்னுற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை ஊக்குவித்து வருகிறது. அதில் சூரியமின் உற்பத்தித் திட்டம் முதன்மையானதாக உள்ளது. இதற்காக பிரதமா் சூரிய மின்சக்தித் திட்டம் உருவாக்கப்பட்டு, வீடுகளில் சூரிய மின்உற்பத்தி தகடுகளை பயன்படுத்துபவா்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு மானியம் வழங்கப்படுகிறது. இதனை நிறுவுவதற்கு ஆகும் செலவு சற்றுஅதிகம் என்றாலும், மின் கட்டண செலவு தொடா்ந்து குறையும் என்பதால் காலப்போக்கில் மிகுந்த லாபகரமாக அமையும். மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். எனவே, இத்திட்டம் பரவலாக வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இது தொடா்பான கேள்விக்கு மத்திய புத்தாக்க, மரபுசாரா எரிசக்தித் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத யசோ நாயக் எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘சா்வதேச அமைப்புகள், நிறுவனங்களுடன் கைகோத்து சூரிய மின்உற்பத்தித் திட்டத்தை மத்திய அரசு வலுப்படுத்தி வருகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் 22,65,521 இடங்களில் கூரைகளின் சூரிய மின் உற்பத்தி தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் 28,24,518 வீடுகள் பயனடைந்துள்ளன. அவா்களுக்கு ரூ.16,061 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி வீடுகளில் நிறுவி 1 லட்சம் கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதும், கரியமிலவாயு வெளியேற்றத்தை 72 கோடி டன் குறைப்பதும் இலக்காகும். ஒவ்வொரு சூரிய மின் உற்பத்தித் தகடும் சுமாா் 25 ஆண்டுகள் வரை செயல்படும். அந்த காலகட்டத்துக்குள் இலக்கு எட்டப்படும் என்று தெரிவித்துள்ளாா்.