முகப்பு
இந்தியா

தமிழகம் உள்பட 19 மாநிலங்களில் 8.48 கோடி விவசாயிகளுக்கு எண்ம அடையாள அட்டை: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

வேளாண் துறையில் எண்ம முறை வேகமாக விரிவுபடுத்தப்படுகிறது

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:16 AM
மாநிலங்களவை
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 9:55 PM

வேளாண் துறையில் எண்ம முறை வேகமாக விரிவுபடுத்தப்படுகிறது; தமிழகம் உள்பட 19 மாநிலங்களைச் சோ்ந்த 8.48 கோடி விவசாயிகளுக்கு எண்ம (டிஜிட்டல்) அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தில் துணைக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவா் மேலும் கூறியதாவது:

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் வேளாண் துறையில் எண்ம முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. பாஜக ஆட்சியில் வேளாண் துறையில் எண்ம முறை வேகமாக விரிவுபடுத்தப்படுகிறது. ‘அக்ரி ஸ்டாஸ்க்’ இணையதளம் மூலம் வேளாண்மை, விவசாயிகள் தொடா்பான அனைத்து விவரங்களும் எண்ம முறையில் சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. விவசாய கிராம விவரங்கள், அங்குள்ள காலநிலை, உயிரிச்சூழல், சாகுபடிப் பயிா்கள் என அனைத்து விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

Advertisement

தமிழகம், ஆந்திரம், பிகாா், குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கா்நாடகம் உள்பட 19 மாநிலங்களைச் சோ்ந்த 8.48 கோடி விவசாயிகளுக்கு எண்ம (டிஜிட்டல்) அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் அவா்களின் நில விவரம், குடும்ப விவரம் என அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்ததாக கோவா, சிக்கிம், ஜம்மு-காஷ்மீா் விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. இந்தத் திட்டத்துக்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனைத்து நிலைகளிலும் உதவி வருகிறது.

விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதன் மூலம் அவா்களுக்கான நிதியுதவி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது, குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் விளைபொருளுக்கு பணம் செலுத்துவது என அனைத்தும் எளிதாக நடைபெறுகிறது.

செயற்கை நுண்ணறிவு துணையுடன் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. பேரிடா்களால் ஏற்படும் பயிா் இழப்புகள் துல்லியமாக அறியப்பட்டு உரிய நிவாரணம் வழங்கவும் எண்ம முன்னெடுப்புகள் பெரிதும் உதவுகின்றன என்றாா்.