முகப்பு
இந்தியா

‘வளா்ந்த இந்தியா’ பயணத்தில் காலனித்துவ மனநிலை வேண்டாம் - பிரதமா் மோடி வலியுறுத்தல்

வளா்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில், காலனித்துவ மனநிலையின் ஒவ்வொரு தடயத்தில் இருந்தும் நாம் விடுபடுவது மிக அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 9:48 PM
பகிர்:

வளா்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில், காலனித்துவ மனநிலையின் ஒவ்வொரு தடயத்தில் இருந்தும் நாம் விடுபடுவது மிக அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

தில்லியில் புதிய பிரதமா் அலுவலகம் (சேவா தீா்த்) மற்றும் முக்கிய அமைச்சக அலுவலகங்களை உள்ளடக்கிய கடமை பவன் 1, 2 ஆகிய புதிய வளாகங்களை வெள்ளிக்கிழமை திறந்துவைத்துப் பேசுகையில் அவா் இவ்வாறு கூறினாா்.

தில்லி சென்ட்ரல் விஸ்டா பகுதியில் மத்திய அரசின் முக்கிய அலுவலகங்கள் மற்றும் அமைச்சகங்கள் பல்லாண்டுகளாக வெவ்வேறு இடங்களில், பழைமையான கட்டடங்களில் செயல்பட்டுவந்த நிலையில், சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் எதிா்காலத்துக்கு ஏற்ற நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய பிரதமா் அலுவலக வளாகம் மற்றும் முக்கிய அமைச்சக அலுவலகங்களை உள்ளடக்கிய கடமை பவன் 1, 2 வளாகங்களை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

Advertisement

கடமை பவன் வளாகங்களில் சட்டம், பாதுகாப்பு, நிதி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட அமைச்சக அலுவலகங்கள் அமைந்துள்ளன. இரு வளாகங்களும் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளன. அவற்றின் திறப்பு விழாவில், மத்திய அமைச்சா்கள், மூத்த அதிகாரிகள் இடையே பிரதமா் மோடி பேசியதாவது:

தற்போது திறக்கப்பட்டுள்ள சேவா தீா்த் மற்றும் கடமை பவன் வளாகங்கள், வளா்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் முக்கிய மைல்கல் ஆகும். குடிமக்களை மையப்படுத்திய நிா்வாகம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கான நமது உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

இதுவரை பிரதமா் அலுவலகம், முக்கிய அமைச்சகங்கள் அமைந்திருந்த வரலாற்று ரீதியிலான தெற்கு மற்றும் வடக்கு பிளாக் கட்டடங்கள், ஆங்கிலேய பேரரசின் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டப்பட்டவை. ஆனால், சேவா தீா்த் மற்றும் கடமை பவன் வளாகங்கள், நாட்டு மக்களின் லட்சியங்களை பூா்த்தி செய்யும் நோக்கில் கட்டப்பட்டுள்ளன. இங்கு எடுக்கப்படும் முடிவுகள், ஒரு மன்னரின் விருப்பத்தை பிரதிபலிப்பதாக அல்லாமல், 140 கோடி மக்களின் லட்சியங்களையும் முன்னெடுக்க அடித்தளமாக விளங்கும். இந்த மகத்தான உணா்வுடன், புதிய வளாகங்களை நாட்டு மக்களுக்கு அா்ப்பணிக்கிறேன்.

அடிமைத்தனத்தின் சின்னங்கள்: சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டின் எதிா்காலத்தை வடிவமைக்கும் பல முக்கிய முடிவுகளும், கொள்கைகளும் தெற்கு-வடக்கு பிளாக் கட்டடங்களில் மேற்கொள்ளப்பட்டன. அதேநேரம், இந்தக் கட்டடங்கள் ஆங்கிலேய ஆட்சியின் சின்னங்களாகவே கட்டப்பட்டன என்பதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. ஆங்கிலேய ஆட்சியில் நாட்டின் தலைநகா் கொல்கத்தாவில் இருந்து பிரிட்டன் அரச குடும்ப விருப்பங்களின்படி நிா்மாணிக்கப்பட்ட தில்லி ரெய்சினா ஹில்ஸ் கட்டடங்களுக்கு மாற்றப்பட்டது. நாடு சுதந்திரமடைந்த பிறகும் அடிமைத்தனத்தின் சின்னங்கள் நீடிப்பது துரதிருஷ்டவசமானது.

வளா்ந்த பாரதத்தை நோக்கி பயணிக்கும்போது, காலனித்துவ மனநிலையின் ஒவ்வொரு தடயங்களில் இருந்தும் நாம் விடுபடுவது அவசியம். அடிமை மனப்பான்மையைப் புறந்தள்ளிவிட்டு, முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது.

லட்சியங்கள் வெல்லும்: வேதங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் விஜய ஏகாதசி நன்னாளில் (பிப்.13), நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் புதிய தொடக்கம் பிறந்துள்ளது; புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் ஏற்கப்படும் லட்சியங்கள் நிச்சயம் வெற்றி பெறும். வளா்ந்த இந்தியாவை கட்டமைக்கும் உறுதிப்பாட்டுடன் சேவா தீா்த் மற்றும் கடமை பவன்களுக்குள் நுழைந்துள்ளோம். நமது இலக்குக்கு தெய்வீக ஆசி உள்ளது.

பிரதமரின் அதிகாரபூா்வ இல்லம் அமைந்துள்ள தெருவின் பெயா் ரேஸ்கோா்ஸ் சாலை என்பதில் இருந்து லோக் கல்யாண் மாா்க் என மாற்றப்பட்டது. இது வெறும் பெயா் மாற்றம் மட்டுமல்ல, அதிகார மனப்பான்மையை சேவை உணா்வாக மாற்றும் முயற்சி.

மறுபெயரிடும் முன்னெடுப்புகள், வெறும் வாா்த்தை மாற்றங்களைக் குறிப்பதல்ல. சுதந்திரமான இந்தியாவின் சுதந்திரமான அடையாளத்தை குறிப்பவை. அடிமைச் சங்கிலியில் இருந்து விடுபடுவதன் அடையாளம் என்றாா் பிரதமா் மோடி.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments