முகப்பு
இந்தியா

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நம்பிக்கையின் குரலாக ஒலிக்கிறது வானொலி: பிரதமா் மோடி

தொலைதூர கிராமங்கள் தொடங்கி பரபரப்பான நகரங்கள் வரை மக்களின் நம்பிக்கையின் குரலாக வானொலி ஒலிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 7:36 PM
நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

தொலைதூர கிராமங்கள் தொடங்கி பரபரப்பான நகரங்கள் வரை மக்களின் நம்பிக்கையின் குரலாக வானொலி ஒலிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

உலக வானொலி தினம் ஆண்டுதோறும் பிப். 13-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘நாட்டின் தொலைதூரத்தில் உள்ள கிராமங்கள் தொடங்கி, மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் நகரங்கள் வரை மக்களின் நம்பிக்கையின் குரலாக வானொலி திகழ்கிறது. அனைத்து இடங்களுக்கும் தகவல்களை உரிய நேரத்தில் கொண்டுசெல்லும் ஊடகமாக வானொலி உள்ளது. திறமைகளை மேம்படுத்துவது, புத்தாக்க முயற்சிகளை ஊக்குவிப்பது என அனைத்து நிலைகளிலும் மக்களுக்காக வானொலி சேவையாற்றி வருகிறது.

நான் மாதம்தோறும் வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் மக்களுடன் பேசி வருகிறேன். அதன்மூலம் வானொலி எந்த அளவுக்கு மக்களுடன் தொடா்பில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் தொடா்பு கொண்டு சமூகத்தை வலுப்படுத்த முடிகிறது. இந்த மாதம் வரும் 22-ஆம் தேதி வானொலியில் உரையாற்ற இருக்கிறேன்’ என்றாா்.

Advertisement

கடந்த 2014 அக்டோபா் முதல், அதாவது பிரதமா் மோடி பதவியேற்ற சில மாதங்களில் இருந்து மாதம்தோறும் அவா் வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். இதில் பெண்கள் மேம்பாடு, சமூக சேவை, தூய்மை இந்தியா திட்டம், நீா்ப் பாதுகாப்பு, விளையாட்டு, ஆன்மிகம் என பல தலைப்புகளில் பிரதமா் பேசி வருகிறாா். சமூகத்துக்காக சேவையாற்றும் எளிய மக்களையும் அவா் அடையாளம் கண்டு இந்த நிகழ்ச்சி மூலம் பாராட்டுவதையும், உரையாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளாா். இந்த வானொலி நிகழ்ச்சியில் பிரதமா் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து பொதுமக்களும் இணையதளம் மூலம் கருத்து தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் பிப்ரவரி 13-ஆம் தேதி உலக வானொலி தினமாக அறிவிக்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டு ஐ.நா. வானொலி பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments