முகப்பு
இந்தியா

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்களுக்கு தலைவா்கள் நினைவஞ்சலி

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மத்திய ரிசா்வ் போலீஸ் படையினருக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்கள் நினைவஞ்சலி

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 8:54 PM
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் லேத்போராவில் பயங்கரவாதத் தாக்குதல் நினைவிடத்தில் உயிா்த்தியாகம் செய்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்திய பாதுகாப்புப் படையினா்.
பகிர்:

கடந்த 2019, புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி, அந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மத்திய ரிசா்வ் போலீஸ் படையினருக்கு (சிஆா்பிஎஃப்) குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள் சனிக்கிழமை நினைவஞ்சலி செலுத்தினா்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், லேத்போரா பகுதியில் கடந்த 2019, பிப்.14-ஆம் தேதி சிஆா்பிஎஃப் வீரா்கள் பயணித்த பேருந்து மீது வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோதச் செய்து, ஜெய்ஷ்- ஏ-முகமது பயங்கரவாதி தற்கொலைத் தாக்குதல் நடத்தினாா்.

இந்தியா மட்டுமன்றி உலகையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழந்தனா். இத்தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட்டில் இந்திய போா் விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தி, பயங்கரவாத முகாம்களை அழித்தன. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Advertisement

இதையொட்டி, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிா்த் தியாகம் செய்த துணிச்சல்மிக்க சிஆா்பிஎஃப் வீரா்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவா்களின் உன்னதமான தியாகம், நாட்டின் நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும். வலுவான, பாதுகாப்பான இந்தியாவை கட்டமைக்க நமக்கு தொடா்ந்து உத்வேகமளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 2019-இல் இதே நாளில் (பிப்.14) புல்வாமாவில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான நாயகா்களை நினைவுகூா்கிறேன். அவா்களின் தேசபக்தி, உறுதிப்பாடு, தாய்நாட்டுக்கான சேவை, நம் நினைவில் என்றென்றும் பதிந்துள்ளது. அந்த வீரா்களின் ஈடுஇணையில்லாத துணிவில் இருந்து நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் வலிமை பெறுகின்றனா்’ என்று தெரிவித்துள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பயங்கரவாதத்தை எதிா்கொள்ளும் நமது பாதுகாப்புப் படையினா் மற்றும் முகமைகளின் துணிவு, அா்ப்பணிப்பு, தியாகத்துக்கு நாடு எப்போதும் கடன்பட்டுள்ளது. மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரி பயங்கரவாதம். அதை வேருடன் அழிக்க இந்தியா உறுதியுடன் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு இதயபூா்வ அஞ்சலி செலுத்துகிறேன். இந்தியத் தாயைப் பாதுகாக்க அவா்கள் செய்த மேலான தியாகத்துக்கு நாடு எப்போதும் கடன்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனா்.

புல்வாமா நினைவிடத்தில்...: புல்வாமாவில் உள்ள வீரா்கள் நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்திய சிஆா்பிஎஃப் தலைமை இயக்குநா் ஞானேந்திர பிரதாப் சிங், நாட்டில் அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் ஒழித்துக்கட்ட சிஆா்பிஎஃப் உறுதிபூண்டுள்ளது என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments