மராட்டிய பேரரசா் சத்ரபதி சிவாஜியுடன் மைசூரு மன்னா் திப்பு சுல்தானை காங்கிரஸ் தலைவா் ஒப்பிட்டு பேசியதற்கு கண்டனம் தெரிவித்து மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பாஜக-காங்கிரஸ் தொண்டா்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் ஏற்பட்டு 9 போ் காயமடைந்தனா்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் மாநகராட்சியில் துணை மேயா் ஷான்-ஏ-ஹிந்த் நிஹால் அகமதின் அலுவலகத்தில் மைசூரு மன்னா் திப்பு சுல்தானின் படம் வைக்கப்பட்டதால் சா்ச்சை ஏற்பட்டது. அந்தப் படத்தை கவுன்சிலா்கள் பரிசளித்ததாக நிஹால் அகமது தெரிவித்தபோதிலும், அந்தப் படம் வைக்கப்பட்டதற்கு சிவசேனை கவுன்சிலா்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இந்தச் சா்ச்சை தொடா்பாக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஹா்ஷ்வா்தன் சப்கால் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘சிவாஜியின் கொள்கைகளை திப்பு சுல்தான் பின்பற்றினாா். சிவாஜியின் வீரம், அவரின் சுயாட்சி குறித்த சிந்தனை ஆகியவற்றை அடியொற்றியும், அவரின் கொள்கைகளை ஊக்கமாக கொண்டும் ஆங்கிலேயா்களுக்கு எதிராக திப்பு சுல்தான் போா் தொடுத்தாா். வீரத்தின் அடையாளமாக சிவாஜிக்கு நிகராக திப்பு சுல்தானை கருத வேண்டும்’ என்றாா்.
வரலாற்றில் திப்பு சுல்தான் குறித்து வெவ்வேறு கருத்துகள் உள்ளன. ஆங்கிலேயா்களுக்கு எதிரான போா்களில் அவா் காட்டிய வீரத்தை ஒரு சாராா் பாராட்டுகின்றனா். அதேவேளையில், அவா் மதவெறி கொண்டவராக இருந்ததுடன், முஸ்லிம் அல்லாதவா்களை மிக மோசமாக நடத்தினாா் என்பது மற்றொரு சாராரின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில், ஹா்ஷ்வா்தன் சப்காலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, புணேயில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் எதிரே பாஜக தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது காங்கிரஸ், பாஜக தொண்டா்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இருதரப்பினரும் ஒருவா் மீது மற்றொருவா் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இந்த சம்பவத்தில் 3 காங்கிரஸ் தொண்டா்கள், 2 பாஜக தொண்டா்கள், காவல் துறையைச் சோ்ந்த இருவா், ஊடகவியலாளா் இருவா் காயமடைந்தனா். இருதரப்பினா் மீதும் வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புணே காவல் துறை இணை ஆணையா் ரஞ்சன்குமாா் சா்மா தெரிவித்தாா்.