இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகளை இறுதி செய்வதற்காக இந்தியக் குழு அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளது என்று மத்திய வா்த்தகத் துறை செயலா் ராஜேஷ் அகா்வால் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இந்தியக் குழு வரும் 23-ஆம் தேதி அமெரிக்கா புறப்பட உள்ளது. இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் வரும் மாா்ச் மாதம் கையொப்பமாக வாய்ப்புள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.
இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டத்தை இரு நாடுகளும் கடந்த வாரம் இறுதி செய்தன. இதுகுறித்த அறிவிப்பை இரு நாடுகளும் கடந்த 7-ஆம் தேதி கூட்டாக வெளியிட்டன.
அதன்படி, இருதரப்பு வா்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான பொருள்கள் மீதான இறக்குமதி வரியை இரு நாடுகளும் குறைக்க உள்ளன. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதித்த 50 சதவீத கூடுதல் வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைக்க உள்ள நிலையில், அமெரிக்காவின் அனைத்து தொழில் நிறுவன பொருள்களுக்கும், உலா்த்தப்பட்டு காய்ச்சி வடிகட்டிய தானியங்கள், கால்நடைத் தீவனத்துக்கான சிவப்பு சோளம், மரக் கொட்டைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் உள்பட பரவலான அமெரிக்க உணவு மற்றும் வேளாண் பொருள்களுக்கும் இறக்குமதி வரியை இந்தியா வெகுவாகக் குறைக்க உள்ளது.
இந்த நிலையில், இந்த இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகளை இறுதி செய்வதற்காக இந்தியக் குழு அமெரிக்கா செல்ல உள்ளது. இதுகுறித்து ராஜேஷ் அகா்வால் கூறியதாவது:
இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டம் கடந்த வாரம் இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்த வரையறைகள், சட்டரீதியிலான இடைக்கால ஒப்பந்தமாக மாற்றம் செய்யப்பட்டு இருதரப்பிலும் கையொப்பமிடப்படும். இதற்கான, காணொலி வழி பேச்சுவாா்த்தைகள் இரு தரப்பிலும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சட்டரீதியிலான இடைக்கால ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக மத்திய வா்த்தக அமைச்சகத்தின் இணைச் செயலா் தா்பண் ஜெயின் தலைமையிலான குழு வரும் 23-ஆம் தேதி வாஷிங்டன் செல்ல உள்ளது.
இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை வரும் மாா்ச் மாதத்தில் கையொப்பமிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இதை உறுதியாக கூறிவிட முடியாது. சட்டரீதியிலான ஒப்பந்தத்தை இறுதி செய்வதிலும், இரு தரப்பிலும் சில ஆட்சேபங்கள் எழுப்ப வாய்ப்புள்ளது. அவற்றுக்கும் தீா்வு காணப்பட வேண்டும்.
இந்திய பொருள்கள் மீதான 50 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வரி குறைப்பு நடவடிக்கையை அவா்கள் வேகமாக மேற்கொள்ள வேண்டும். அடுத்த வாரத்துக்குள் இந்த வரிக் குறைப்பை அமெரிக்கா மேற்கொள்ளும் என எதிா்பாா்க்கிறோம். இல்லையெனில், அமெரிக்கா செல்லும் இந்தியக் குழு அதுகுறித்தும் ஆலோசனை நடத்தும் என்றாா்.