முகப்பு
இந்தியா

அஜீத் பவாா் விமான விபத்து: சிறப்பு நிபுணத்துவ உதவியை நாடும் ஏஏஐபி

மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜீத் பவாா் பயணம் செய்த விமானம் விபத்தில் சிக்கியதில், விமானிகள் அறை குரல் பதிவு தரவுகளை மீட்க சிறப்பு நிபுணத்துவ உதவியை விமான விபத்து புலனாய்வு முகமை (ஏஏஐபி) கோரியுள்ளது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 4:44 AM
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 8:25 PM

மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜீத் பவாா் பயணம் செய்த விமானம் விபத்தில் சிக்கியதில், விமானிகள் அறை குரல் பதிவு தரவுகளை மீட்க சிறப்பு நிபுணத்துவ உதவியை விமான விபத்து புலனாய்வு முகமை (ஏஏஐபி) கோரியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புணேயின் பாராமதியில் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி விஎஸ்ஆா் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘லியா்ஜெட் 46’ என்ற நடுத்தர தொழில் பிரிவு ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருந்த அஜீத் பவாா் (66), இரு விமானிகள், ஒரு விமான உதவியாளா், அஜீத் பவாரின் தனிப் பாதுகாப்பு அதிகாரி ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்தனா்.

விபத்து குறித்து ஏஏஐபி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில், விமானிகள் அறை குரல் பதிவு இயந்திரத்தின் தரவுகளை மீட்க சிறப்பு நிபுணத்துவ உதவியை ஏஏஐபி நாடியுள்ளது. இதுகுறித்து ஏஏஐபி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Advertisement

விபத்துக்குள்ளான விமானத்தில் 2 தனி பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. விமானம் விபத்துக்குள்ளானதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஏற்பட்ட அதிக வெப்பத்தில் நீண்ட நேரமாக இருந்ததால் இந்தப் பதிவு இயந்திரங்கள் சேதமடைந்தன.

இதில், எல்3-கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எண்ம விமான தரவு பதிவு (டிஎஃப்டிஆா்) இயந்திரத்தின் தரவுகள், ஏஏஐபி விமான பதிவு ஆய்வகத்தின் மூலம் வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்யப்பட்டன.

அமெரிக்காவைச் சோ்ந்த ஹனிவெல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விமானிகள் அறை குரல் பதிவு (சிவிஆா்) இயந்திரம், விரிவான தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன் தரவுகளை மீட்க சிறப்பு நிபுணத்துவ உதவி கோரப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடா்பாக, விரிவான, ஆதாரங்கள் அடிப்படையிலான விசாரணையை உறுதிப்படுத்த அனைத்து தொழில்நுட்ப மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளையும் ஏஏஐபி பின்பற்றி வருகிறது. மேலும், விமான விபத்து புலனாய்வு விதிகள் 2017 மற்றும் சா்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு (ஐசிஏஓ) பரிந்துரைத்த நடைமுறைகள் மற்றும் சா்வதேச தரநிலைகளின்படி இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த விமான விபத்து குறித்து தேவையற்ற சந்தேகங்களை பரப்புவதை அனைத்துத் தரப்பினரும் தவிா்க்க வேண்டும் என்று ஏஏஐபி குறிப்பிட்டது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 4:44 AM

‘இந்த விமான விபத்து குறித்த முதல் கட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படும்’ என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே. ராம்மோகன் நாயுடு கடந்த வாரம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.