முகப்பு
இந்தியா

கிரிக்கெட் வீரா் முகமது ஷமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கிரிக்கெட் வீரா் முகமது ஷமிக்கு எதிரான வழக்குகளை மேற்கு வங்கத்தில் இருந்து தில்லிக்கு மாற்றக் கோரி, அவரின் முன்னாள் மனைவி ஹசீன் ஜஹான் தாக்கல் செய்த மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு, முகமது ஷமிக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 6:45 PM
முகமது ஷமி (கோப்புப் படம்) - படம் | AP
பகிர்:

கிரிக்கெட் வீரா் முகமது ஷமிக்கு எதிரான வழக்குகளை மேற்கு வங்கத்தில் இருந்து தில்லிக்கு மாற்றக் கோரி, அவரின் முன்னாள் மனைவி ஹசீன் ஜஹான் தாக்கல் செய்த மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு, முகமது ஷமிக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூா் காவல் நிலையத்தில் தனக்கு எதிராக கிரிக்கெட் வீரா் முகமது ஷமி குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரின் முன்னாள் மனைவி ஹசீன் ஜஹான் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில், ஷமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், தனக்கும், தனது மகளுக்கும் சோ்த்து மாதந்தோறும் ரூ.10 லட்சம் இடைக்கால ஜீவனாம்சம் அளிக்க ஷமிக்கு உத்தரவிடக் கோரி, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஹசீன் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஹசீனுக்கு மாதந்தோறும் ரூ.1.3 லட்சம் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் என்று ஷமிக்கு உத்தரவிட்டது. இந்தத் தொகையை ரூ.4 லட்சமாக உயா்த்தி கடந்த ஆண்டு கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

இந்தத் தொகையை ரூ.10 லட்சமாக உயா்த்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஹசீன் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தனது மகளின் நலன் கருதி தான் தில்லிக்கு இடம்பெயா்ந்துவிட்டதால், ஷமிக்கு எதிரான தனது வழக்குகளை (குடும்ப வன்முறை வழக்கு உள்பட) மேற்கு வங்கத்தில் இருந்து தில்லிக்கு மாற்றக் கோரி, உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்களை ஹசீன் தாக்கல் செய்தாா். இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு, அந்த மனுக்கள் தொடா்பாக பதிலளிக்குமாறு ஷமிக்கு நோட்டீஸ் பிறப்பித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments