இந்தியா

பொறுப்புமிக்க புத்தாக்கம்: இந்தியா - பிரான்ஸ் கைகோக்கும்: ஏ.ஐ. மாநாட்டில் அதிபா் மேக்ரான் உறுதி

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்க இந்தியாவுடன் கைகோத்து செயல்படுவோம் என்று பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பொறுப்புமிக்க புத்தாக்கம் மற்றும் மனிதநேயமிக்க தொழில்நுட்பம் என்ற பிணைப்புடன், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்க இந்தியாவுடன் கைகோத்து செயல்படுவோம் என்று பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் தெரிவித்தாா்.

தில்லியில் சா்வதேச ஏ.ஐ. தாக்க உச்சிமாநாட்டில் வியாழக்கிழமை பங்கேற்றுப் பேசுகையில் அவா் இக்கருத்துகளைக் கூறினாா்.

மேக்ரான் மேலும் பேசியதாவது: புவிசாா் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், அனைத்து எண்ம ரீதியிலான கருவிகளும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை நோக்கி வழிநடத்தப்படுவது அவசர அவசியம்.

உலகின் பாதுகாப்பு மற்றும் அனைவருக்கும் வளத்தை உறுதி செய்யும் நோக்கில், உள்நாட்டு ஏ.ஐ. மாதிரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற பொதுவான தொலைநோக்குப் பாா்வையை இந்தியாவும், பிரான்ஸும் கொண்டுள்ளன.

ஜி7 கூட்டமைப்பின் தற்போதைய தலைமைப் பொறுப்பை வகிக்கும் பிரான்ஸ், ஏ.ஐ. தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்நுட்பங்களின் தவறான பயன்பாட்டில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க தீவிர பணிகளை முன்னெடுக்கும். அந்த அடிப்படையில்தான், 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த முன்னெடுப்பில் இந்தியாவும் இணைய வேண்டும் என பிரதமா் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஏ.ஐ. தளத்தில் மிகப் பெரிய செயல்பாட்டாளராக இந்தியா விளங்குகிறது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் நிலைத்தன்மை, திறன், அணுகலை உறுதி செய்ய வலுவான நடவடிக்கைகள் மற்றும் தீா்வுகள் அவசியம் என்றாா் அவா்.

இந்தியாவின் எண்ம வளா்ச்சிக்குப் புகழாரம்

‘எண்ம ரீதியிலான இந்தியாவின் வளா்ச்சி பெரிதும் பாராட்டுக்குரியது. இதுவொரு சாதாரண தொழில்நுட்ப முன்னேற்ற பயணமல்ல, ஒரு நாகரிகத்தின் பயணம்.10 ஆண்டுகளுக்கு முன்பு, மும்பையில் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு வங்கி கணக்கு கிடையாது. எந்த முகவரியோ, ஆவணங்களோ கிடையாது. இன்று, அந்த வியாபாரிகள் தங்களின் கைப்பேசி மூலம் உடனடி பணப் பரிவரித்தனை மேற்கொள்கின்றனா். 140 கோடி மக்களுக்கு எண்ம அடையாளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 2,000 கோடி பரிவா்த்தனைகள் நிகழும் எண்ம பரிவா்த்தனை அமைப்புமுறை இங்குள்ளது’ என்று புகழாரம் சூட்டினாா் மேக்ரான்.

பறந்தனே பெண்ணே பாடல்!

#t20wc | அபிஷேக் சர்மாவை என்ன செய்ய வேண்டும்? | T20 World Cup | Abhishek Sharma |

மீசையமுறுக்கு 2 டீசர்!

திமுக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது! - OPS

டாக்சிக் டீசர்!

SCROLL FOR NEXT