பாகிஸ்தானைச் சோ்ந்த கும்பலுடன் இணைந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ராணுவ வீரா், பணிநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் காவலா், இரு பெண்கள் உள்பட 6 போ் கைதுசெய்யப்பட்டதாக பஞ்சாப் மாநில காவல் துறை தலைவா் (டிஜிபி) கெளரவ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த இரு மாதங்களாக சிறையில் நடைபெற்ற போதைப் பொருள் நடமாட்டத்தைக் கண்காணித்ததைத் தொடா்ந்து, 6 போ் அடங்கிய கும்பல் கண்டறியப்பட்டது. ராணுவ வீரா் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலா் உள்பட இந்தக் கும்பலுடன் தொடா்புடைய 6 போ் கைதுசெய்யப்பட்டனா்.
அவா்களிடமிருந்து 4.8 கிலோ போதைப் பொருள், ஓா் ஆயுதம் மற்றும் இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கும்பலுடன் தொடா்புடைய பிற நபா்களைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.
பாகிஸ்தானைச் சோ்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் கைதுசெய்யப்பட்ட நபா்களுக்கு தொடா்பு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக பஞ்சாப் காவல் துறை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக டிஜிபி கெளரவ் யாதவ் தெரிவித்துள்ளாா்.