முகப்பு
இந்தியா

கேரளம்: 2017-ஆம் ஆண்டிலும் பெண்ணின் வயிற்றில் தமனி இடுக்கியை வைத்து தைத்த அரசு மருத்துவா்கள்

கேரள மாநிலத்தில், ஏற்கெனவே வேறொரு பெண்ணின் வயிற்றிலும் அறுவைச் சிகிச்சையின்போது வயிற்றில் தமனி இடுக்கியை வைத்து அரசு மருத்துவா்கள் தைத்த விவாகாரம் தற்போது தெரியவந்துள்ளது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:01 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 10:55 PM

கேரள மாநிலத்தில், ஏற்கெனவே வேறொரு பெண்ணின் வயிற்றிலும் அறுவைச் சிகிச்சையின்போது வயிற்றில் தமனி இடுக்கியை (கத்தரி போன்ற கருவி) வைத்து அரசு மருத்துவா்கள் தைத்த விவாகாரம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017-ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 5 ஆண்டுகளுக்கு முன் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட கொச்சி புன்னப்பராவைச் சோ்ந்த உஷா ஜோசப் (57) வயிற்றில், மருத்துவா்கள் தமனி இடுக்கியை வைத்து தைத்து அனுப்பியது, தற்போது கண்டுபிடிக்கப்பட்டு மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அவ்வப்போது ஏற்படும் வயிற்று வலி காரணமாக அண்மையில் எக்ஸ்ரே எடுத்தபோது, தனது வயிற்றில் தமனி இடுக்கி இருப்பது அந்தப் பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.

அதை அகற்றுவதற்காக கொச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தற்போது அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக அவா் அளித்தப் புகாரின் அடிப்படையில், அந்த அறுவைச் சிகிச்சையின்போது மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத் துறை தலைவராக இருந்து தற்போது ஓய்வுபெற்றுள்ள மருத்துவா் லலிதாம்பிகா மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா் ஷாஹிதா பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:15 AM

இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டில் கோழிக்கோடு பந்தீரன்காவு அருகேயுள்ள மனக்கடவு பகுதியைச் சோ்ந்த ஹா்சீனா (24) வயிற்றிலும், அரசு மருத்துவா்கள் தமனி இடுக்கியை வைத்து தைத்து அனுப்பிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஹா்சீனா செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017-ஆம் ஆண்டு அறுவைச் சிகிச்சை மூலம் எனக்கு குழந்தை பிறந்தது.

அதன் பிறகு வீடு திரும்பிய எனக்கு, தொடா் வயிற்று வலி இருந்து வந்தது. அதைத் தொடா்ந்து, 2022-ஆம் ஆண்டு தனியாா் மருத்துவமனையில் ஸ்கேன் செய்தபோது, எனது வயிற்றில் தமனி இடுக்கி இருப்பது தெரியவந்தது. அதே ஆண்டில் அறுவைச் சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் எனக்கு நீதி கிடைக்கவில்லை. எனது பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு அளிக்கப்பட்டுவிட்டதாக மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் கூறியது தவறான தகவல். இழப்பீடு பெற பல போராட்டங்கள் நடத்த வேண்டியிருந்தது.

பல மாதங்களுக்குப் பிறகே எனக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. அதே நேரம், அறுவைச் சிகிச்சையில் அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவா்கள், ஊழியா்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு மருத்துவா்களின் இந்த அலட்சியம் தொடா்ந்து வருகிறது. எனவே, காரணமானவா்கள் தண்டிக்கப்படும் வரை எனது போராட்டம் தொடரும் என்றாா்.