புதுதில்லி : 60-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து நாடாளுமன்ற நட்புக் குழுக்களை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைத்துள்ளார்.
மக்களவை நடவடிக்கையில் பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் குற்றம்சாட்டி அவைத் தலைவர் ஓம் பிர்லாவை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களான சசி தரூர், ப.சிதம்பரம், கௌரவ் கோகோய் (காங்கிரஸ்), கனிமொழி (திமுக), டெரக் ஓ பிரையன், அபிஷேக் பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), அரவிந்த் சாவந்த் (சிவசேனை}தாக்கரே), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்}பவார்), அசாதுதீன் ஒவைசி (மஜ்லிஸ் கட்சி), அகிலேஷ் யாதவ் மற்றும் ராம்கோபால் யாதவ் (சமாஜவாதி) ஆகியோர் தலைமையில் தலா ஒரு நட்புக் குழுவை ஓம் பிர்லா அமைத்துள்ளார். ஒவ்வொரு குழுவிலும் 11 எம்.பி.க்கள் இடம்பெறுவார்கள்.
அதேபோன்று, பாஜக மூத்த தலைவர்களான ரவிசங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா, நிஷிகாந்த் துபே மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோர் தலைமையிலும் நட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவசேனை பிரமுகர் ஸ்ரீகாந்த் ஷிண்டே, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா ஆகியோர் தலைமையிலும் நட்புக் குழுக்களை ஓம் பிர்லா அமைத்துள்ளார்.
இந்தக் குழுக்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் 64 நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்படுவார்கள். மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒருவரான மாணிக்கம் தாகூர், இந்தோனேசியாவுடனான நட்புக் குழுவின் உறுப்பினராகச் செயல்படுவார். எம்.பி.க்களான குர்ஜீத் சிங் ஒளஜ்லா (இத்தாலி), ஹிபி ஏடன் (சிங்கப்பூர்), அமரீந்தர் சிங் ராஜ் வாரிங் (பிரிட்டன்), பிரசாந்த் படோலே (டிரினிடாட் அண்ட் டொபாகோ), டீன் குரியகோஸ் (சவுதி அரேபியா), சி.கிரண்குமார் ரெட்டி (தென் கொரியா) ஆகியோர் சம்பந்தப்பட்ட நாடுகளுடனான நட்புக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.யான எஸ்.வெங்கடேசன், கியூபாவுடனான நட்புக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்ற மேலும் சில நட்புக் குழுக்களை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஓம் பிர்லா தெரிவிக்கையில் "இந்த நடவடிக்கையானது பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தையை தீவிரமாக கொண்டுசெல்வதற்கான இந்திய நாடாளுமன்றத்தின் முயற்சியாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு}காஷ்மீரின் பஹல்காம் நகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியாவின் முப்படைகளும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குல் நடவடிக்கையை மேற்கொண்டன.
அது குறித்து உலக நாடுகளுக்கு விளக்குவதற்காக ஏழு நாடாளுமன்றக் குழுக்களை மத்திய அரசு அமைத்தது.
இந்நிலையில், தற்போது அமைக்கப்பட உள்ள நாடாளுமன்ற நட்புக் குழுக்களில் பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், இஸ்ரேலுக்கான நட்புக் குழுவின் தலைவராக இருப்பார். பாஜகவைச் சேர்ந்த பைஜெயந்த் பாண்டா, அமெரிக்காவுக்கான நட்புக் குழுவின் தலைவராக இருப்பார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், மணீஷ் திவாரி ஆகியோர் முறையே இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடான நட்புக் குழுவின் தலைவர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.