முகப்பு
இந்தியா

அழைப்பாணைகள் புறக்கணிப்பு! ஜாா்க்கண்ட் முதல்வருக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணைக்கு தடை!

சட்டவிரோத சுரங்க வழக்கில் அழைப்பாணைகளைப் புறக்கணித்ததாகக் கூறி, ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த குற்ற வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 2:04 AM
ஹேமந்த் சோரன் - படம் | எக்ஸ்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:45 PM

சட்டவிரோத சுரங்க வழக்கில் அழைப்பாணைகளைப் புறக்கணித்ததாகக் கூறி, ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த குற்ற வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது.

சட்டவிரோத சுரங்க வழக்கில் 7 முறை அழைப்பாணைகள் அனுப்பியும் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகவில்லை என்று குற்றஞ்சாட்டி, அவா் மீது அமலாக்கத் துறை கடந்த 2024-இல் குற்ற வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளதாக, ராஞ்சி தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றம் உறுதி செய்து, அடுத்தக்கட்ட நடைமுறைகளுக்காக எம்.பி.-எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பியது.

இதையடுத்து, தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி, ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் சோரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 2:04 AM

இந்த உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் சோரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த மனு புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.

அப்போது, சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, அா்ணவ் செளதரி ஆகியோா், சோரனுக்கு அமலாக்கத் துறை இடைவிடாது அழைப்பாணைகள் அனுப்பியதாக வாதிட்டனா். அதேநேரம், 7 முறை அழைப்பாணை அனுப்பியும் சோரன் இணங்கவில்லை என்று அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, ஹேமந்த் சோரனுக்கு எதிரான விசாரணைக்குத் தடை விதித்த நீதிபதிகள், அமலாக்கத் துறை பயனுள்ள வழக்கு விசாரணைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தனா். மேலும், மனு மீது விரிவாக பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பினா்.