மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் மாசடைந்த குடிநீரைக் குடித்து 13 பேர் பலியானதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.
இந்தூரின் பகிரதபுரத்தில் நர்மதா நதியில் இருந்து குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை குடித்த உள்ளூர்வாசிகளுக்கு, கடந்த சில நாள்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் சுத்தமான நகரமாகக் கருதப்படும் இந்தூரில் ஏற்பட்ட இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், இதனால், சுமார் 1,400 முதல் 1,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேசத்தின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், கடந்த புதன்கிழமை (டிச. 31) நேரில் பார்வையிட்டார். இதையடுத்து, பத்திரிகையாளர்களுடன் பேசிய முதல்வர் மோகன் யாதவ் குடிநீர் மாசுபாட்டினால் இதுவரை 4 பேர் பலியானதாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சில மணிநேரங்களில் இந்தூர் நகர மேயர் புஷ்யமித்ரா பார்கவா, இந்த விவகாரத்தில் 7 பேர் பலியானதாகத் தெரிவித்தார். ஆனால், மாசடைந்த குடிநீரைக் குடித்த 6 மாத குழந்தை உள்பட 13 பேர் இதுவரைப் பலியாகியுள்ளனர் என உள்ளூர்வாசிகள் கூறுவதால், உண்மையான பலி எண்ணிக்கையில் குழப்பம் நிலவுகிறது.
இத்துடன், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்ளூர்வாசிகள் அனைவரும் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டனர் எனவும், அவர்கள் தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தண்ணீர் விநியோகிக்கப்படும் குழாய்கள் சேதமடைந்து கழிவுநீர் கலந்ததால் குடிநீர் மாசடைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.