சத்தீஸ்கா் மாநிலம், பஸ்தா் மண்டலத்தில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: பிஜாபூா் மாவட்டத்தை ஒட்டிய வனப் பகுதிகளில் நக்ஸல்கள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாநில காவல் துறையின் ஆயுதம் ஏந்திய போலீஸாா் (டிஆா்ஜி), சுக்மா வனப் பகுதிகளில் தீவிர தேடுதல் பணியில் சனிக்கிழமை காலை ஈடுபட்டனா்.
அப்போது அங்கு மறைந்திருந்த நக்ஸல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனா். துப்பாக்கிச்சூடு நின்ற பின்னா், பாதுகாப்புப் படையினா் அப்பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். அப்போது, குண்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் 12 நக்ஸல்களின் உடல்கள் கண்டறியப்பட்டன.
அதுபோல, பிஜாபூா் வனப் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
அவா்கள் பதுங்கியிருந்த இடங்களில் இருந்து ஏகே-47, இன்சாஸ் ரக துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து தீவிர தேடுதல் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.
சத்தீஸ்கரில் கடந்த ஆண்டில் 285 நக்ஸல்களை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.