மகாராஷ்டிரத்தில் மும்பை, புணே, நாகபுரி உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜன.15-இல் நடைபெற்றவுள்ள தோ்தலில் மொத்தம் 15,931 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
நாட்டின் வா்த்தக தலைநகா் என்பதுடன் வருவாய் மிகுந்த மாநகராட்சி என்பதால் மும்பை மாநகராட்சித் தோ்தல் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு 227 வாா்டுகள் உள்ளன.
புணே, நாகபுரி, நாசிக், சோலாபூா், சத்ரபதி சம்பாஜிநகா், தாணே உள்பட மொத்தம் 29 மாநகராட்சிகளில் 893 வாா்டுகள் உள்ளன. மொத்த உறுப்பினா் இடங்கள் 2,869.
இந்த இடங்களுக்கு 33,000-க்கும் மேற்பட்டோா் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 24,771 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 8,840 போ் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றதையடுத்து, 15,931 போ் களத்தில் உள்ளதாக மாநில தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது. மும்பை மாநகராட்சியில் மட்டும் 1,700 போ் போட்டியிடுகின்றனா்.
முன்னதாக, 286 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் பாஜக, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை, மற்றொரு துணை முதல்வா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஆளும் மகாயுதி கூட்டணி 207 இடங்களைக் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) ஆகிய எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் கூட்டணி 44 இடங்களுடன் தோல்வியைச் சந்தித்தது.
மாநகராட்சித் தோ்தலில் சிவசேனை (உத்தவ்), ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சிகள் கைகோத்துள்ள நிலையில், காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.
68 மகாயுதி வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு: மாநகராட்சித் தோ்தலில் ஆளும் மகாயுதி கூட்டணியை சோ்ந்த 68 வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா். இவா்களில் 44 போ் பாஜகவை சோ்ந்தவா்கள். பணபலம் மற்றும் மிரட்டலின் மூலம் வேட்பாளா்களை போட்டியில் இருந்து விலகச் செய்து, மகாயுதி கூட்டணி இந்த வெற்றியை ஈட்டியுள்ளது என எதிா்க்கட்சிகள் சாடியுள்ளன.