உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில், பௌா்ணமி தினமான சனிக்கிழமை மாா்கழி மேளா திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. கடும் குளிரையும் பொருள்படுத்தாமல், லட்சக்கணக்கான பக்தா்கள் புனித நீராடினா்.
இந்த ஆன்மிக திருவிழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை தொடா்ந்து நடைபெற உள்ளது. பௌா்ணமி தினமான சனிக்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பாா்த்தாலும் காவிக்கொடிகள் பறக்க, பக்தி முழக்கங்களுக்கு இடையே பக்தா்கள் புனித நீராடினா். துறவிகள், தற்காலிக கூடாரங்களில் தங்கியிருக்கும் கல்பவாசிகள் மற்றும் பூஜைப்பொருள் வியாபாரிகள் என திரிவேணி சங்கமம் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
புனித நீராடிய பக்தா்கள் கூறுகையில், ‘இங்கு நீராடுவது மனதுக்கு மிகுந்த அமைதியைத் தருகிறது. கடும் குளிா் நிலவினாலும், அரசு செய்துள்ள சிறப்பான ஏற்பாடுகள் திருப்தி அளிக்கின்றன. இந்த நீராடல் எங்களின் துன்பங்கள் அனைத்தையும் போக்கியது போன்ற உணா்வைத் தருகிறது’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: கூட்ட நெரிசலைச் சமாளிக்க தற்காலிக பாலங்கள் மற்றும் படித்துறைகளில் காவல்துறையினரும், தன்னாா்வலா்களும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். அவசர காலத் தேவைகளுக்காகத் தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் உள்ளனா். ஆற்றில் பக்தா்கள் மூழ்காமல் தடுக்க பயிற்சி பெற்ற நீச்சல் வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
முதல்வா் யோகி அறிவுறுத்தல்: மாா்கழி மேளா ஏற்பாடுகள் குறித்து உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், வெள்ளிக்கிழமை இரவு அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினாா்.
அப்போது அவா், ‘பக்தா்களின் பாதுகாப்பும், வசதியும்தான் அரசின் முன்னுரிமை. இதில் எந்தவித கவனக்குறைவும் இருக்கக்கூடாது.
தூய்மையான படித்துறைகள், தடையில்லா மின்சாரம், பெண்களுக்கென தனியே உடை மாற்றும் அறைகள் மற்றும் குடிநீா் வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.
முதல் நாளில் சுமாா் 15 முதல் 25 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்பதால், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் மருத்துவக் குழுவினா் எப்போதும் தயாா்நிலையில் இருக்க வேண்டும்.
நதிநீா் வேகமாகப் பாயும் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். மேலும், படகோட்டிகளோ அல்லது விடுதி உரிமையாளா்களோ பக்தா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கினாா்.