கொல்கத்தா அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதற்கு பிசிசிஐ நிர்வாகத்துக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக, வங்கதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முஸ்தாஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா அணி (கேகேஆர்) ஒப்பந்தம் செய்திருந்தது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைகளால், கேகேஆர் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்தன.
இதனைத் தொடர்ந்து, முஸ்தாஃபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து நீக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியதால், அவர் கேகேஆர் அணியில் இருந்து இன்று (ஜன. 3) விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பிசிசிஐ நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டதாவது:
“இந்த விவகாரத்தில் எனது கருத்துக்களை நான் மீண்டும் நினைவுபடுத்துகிறேன். இப்போது, பிசிசிஐ வருந்தத்தக்க வகையில் முஸ்தாஃபிசுர் ரஹ்மானை நீக்கியுள்ளது.
ஒருவேளை இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் அல்லது சௌமியா சர்க்காராகவோ இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? இதில் நாம் யாரைத் தண்டிக்கிறோம், ஒரு நாட்டையா, ஒரு தனிநபரையா அல்லது அவரது மதத்தையா? விளையாட்டை இப்படி அரசியலாக்குவது நம்மை எங்கு கொண்டு செல்லும்” எனக் கூறியுள்ளார்.
இதேபோன்ற மற்றொரு பதிவில் அவர் கூறுகையில்,
“முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஒரு கிரிக்கெட் வீரர், இந்த விவகாரத்துக்கும் அவருக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. அவர் தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்புப் பேச்சோ அல்லது தாக்குதலை ஆதரித்ததாகவோ, நியாயப்படுத்தியதாகவோ அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டுகளும் இல்லை. இந்த இரண்டையும் ஒன்றாகக் கலப்பது முற்றிலும் நியாயமற்றது” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.