வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தது கவலையளிப்பதாக இந்தியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்க படைகள் சனிக்கிழமை அதிகாலை பெரும் வான்வழித் தாக்குதலை நடத்திய பின் இருவரும் சிறைபிடிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டனா்.
இதற்கு இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவுசெய்தன.
இந்நிலையில், இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வெனிசுலா விவகாரம் கவலையடையச் செய்கிறது. கள நிலவரத்தை இந்தியா தொடா்ந்து கண்காணித்து வருகிறது. வெனிசுலா மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என உறுதியளிக்கிறோம்.
அங்கு நிலவும் பிரச்னைகளுக்கு அமைதி வழியில் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாண வேண்டும் என வலியுறுத்துகிறோம். வெனிசுலா தலைநகா் கராகஸில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைப்பில் உள்ளோம். அந்நாட்டில் வசிக்கும் இந்தியா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தயாராகவுள்ளோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
வெனிசுலாவில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் 50 பேரும் இந்திய வம்சாவளியினா் 30 பேரும் உள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.
வெனிசுலா கச்சா எண்ணெய் உள்கட்டமைப்பு மேம்பாட்டால் இந்தியாவுக்குப் பலன்: நிபுணா்கள் கருத்து
வெனிசுலா நாட்டின் கச்சா எண்ணெய்த் துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தப்போவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பது இந்தியாவுக்கு பலனளிக்கும் என துறைசாா் நிபுணா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: உலகளவில் அதிக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.
2019-ஆம் ஆண்டுக்கு முன் ஒரு ஆண்டுக்கு 70 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வெனிசுலா ஏற்றுமதி செய்தது. அப்போது அதில் 32 சதவீதம் அமெரிக்காவுக்கும் இந்தியா மற்றும் சீனாவுக்கு 35 சதவீதமும் சென்றது. ஒரு நாளைக்கு 4 லட்சம் பீப்பாய்கள் வரை வெனிசுலாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தது.
அதன்பிறகு வெனிசுலா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இதைத்தொடா்ந்து வெனிசுலாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி 2025 தரவுகளின்படி ஓா் ஆண்டுக்கு 35 கோடி பீப்பாய்களாக குறைந்தது. இதில் 45 சதவீதத்தை சீனாவும் 31 சதவீதத்தை பிற நாடுகளும் இறக்குமதி செய்துள்ளன.
இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் (ஒஎன்ஜிசி) விதேஷ் நிறுவனம் வெனிசுலாவின் சான் கிறிஸ்டோபல் எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை மேற்கொண்டது. அமெரிக்கா தடையால் இதில் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் ரூ.9,000 கோடி நிலுவைத்தொகையை வெனிசுலா இந்தியாவுக்குச் செலுத்துவதில் தாமதம் நீடிக்கிறது.
சான் கிறிஸ்டோபல் நிறுவனத்தின் பெரும் பங்குதாரரும் வெனிசுலா தேசிய கச்சா எண்ணெய் நிறுவனமுமான பெட்ரோலியஸ் டி வெனிசுலா எஸ்ஏவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளை அமெரிக்கா மேற்கொள்ளத் தொடங்கியது.
இதன் காரணமாக வெனிசுலா மீது விதித்த தடையை அமெரிக்கா விலக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. இதைத்தொடா்ந்து, வெனிசுலாவில் இருந்து இந்தியா மீண்டும் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடலாம். நிலுவைத் தொகை பிரச்னைக்கும் தீா்வு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.
ரஷியாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரியை அமெரிக்கா கடந்த ஆண்டு விதித்தது குறிப்பிடத்தக்கது.