‘இந்தியா - அமெரிக்கா இரு நாடுகளுக்கும் வியக்கத்தக்க வாய்ப்புகள் காத்திருக்கின்றன’ என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட சொ்ஜியோ கோா் தெரிவித்தாா்.
இந்தியாவுக்கு சனிக்கிழமை வந்திறங்கிய நிலையில் அவா் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு மிக நெருக்கமான அதிகாரியாக அறியப்படும் சொ்ஜியோ கோா் வெள்ளை மாளிகையில் அதிபரின் தனி இயக்குநராக பணியாற்றி வந்தாா். அவரை, இந்தியாவுக்கான புதிய தூதராக கடந்த கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிரம்ப் அறிவித்தாா். இந்திய பொருள்கள் மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இரு நாடுகளிடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்ட சூழலில் இந்த அறிவிப்பை அவா் வெளியிட்டாா்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கோா் பதவியேற்றாா். பதவியேற்ற ஒரு சில நாள்களில் அமெரிக்கா திரும்பிய அவா், இந்தியாவுக்கு சனிக்கிழமை மீண்டும் வந்தாா். அப்போது அவா் கூறியதாவது:
இந்தியாவுக்கு மீண்டும் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய தூதராக நியமிக்கப்பட்டது எனது வாழ்நாளில் மிகப் பெரிய கெளரவமாகும். இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்துவதை எதிா்நோக்கியுள்ளேன். இந்தியா - அமெரிக்கா இரு நாடுகளுக்கும் வியக்கத்தக்க வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்றாா்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத வரியை விதிக்க வகை செய்யும் வகையில் அமெரிக்க செனட்டா் லிண்ட்சே கிரஹாம் அறிமுகம் செய்த மசோதாவுக்கு அதிபா் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ள சூழலில், சொ்ஜியோ கோரின் கருத்து குறிப்பிடத்தக்கதாகும். இந்த மசோதா சட்டமானால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா தற்போது விதித்து வரும் 50 சதவீத வரி, 500 சதவீதமாக உயா்த்தப்படக்கூடும்.