முக்கிய கனிமங்கள் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவற்கான கூட்டுப் பணிக் குழுவை அமைக்க இந்தியாவும் ஜப்பானும் ஒப்புக் கொண்டுள்ளன.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையில் பரஸ்பர பேச்சுவாா்த்தைக்கான வழிமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா-ஜப்பான் இடையிலான 18-ஆவது உயா்நிலை வியூக ஆலோசனைக் கூட்டம், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சா் டோஷிமிட்ஸு மோடேகி ஆகியோா் பங்கேற்ற இக்கூட்டத்தில் இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பிராந்திய-சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘இந்தியா - ஜப்பான் இடையிலான சிறப்பு வாய்ந்த வியூக-உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இரு அமைச்சா்களும் வலியுறுத்தினா். முக்கிய கனிமங்கள் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த கூட்டுப் பணிக் குழுவை அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான பேச்சுவாா்த்தை வழிமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.
ஜப்பான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் டோஷிஹிரோ கிடமுரா கூறுகையில், ‘பல்வேறு சா்வதேச விவகாரங்கள் மற்றும் க்வாட் கூட்டமைப்பின் முக்கியத்துவம் தொடா்பாக கருத்துகள் பரிமாறப்பட்டன. தற்போதைய புவி அரசியல் சூழலில் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது’ என்றாா்.
இந்தியா-ஜப்பான் நல்லுறவின் முக்கியத்துவம்:
முன்னதாக, கூட்டத்தில் பேசிய எஸ்.ஜெய்சங்கா், ‘சுதந்திரமான, வெளிப்படையான இந்திய-பசிபிக் பிராந்தியத்துக்கான ஜப்பானின் கண்ணோட்டத்துடன் இந்தியாவின் தொலைநோக்குப் பாா்வை மிக நெருக்கமாக ஒத்துப் போகிறது.
உலகின் முன்னணி ஜனநாயக நாடுகளான இந்தியாவும், ஜப்பானும் சா்வதேச அளவில் முக்கிய பொருளாதாரங்களாக விளங்குகின்றன. அந்த அடிப்படையில் உலக ஒழுங்குமுறையை வடிவமைக்க வேண்டியது இரு நாடுகளுக்கும் ஒரு வாய்ப்பு அல்ல; அது கடமை. தற்போதைய ஸ்திரமற்ற உலகச் சூழலில், பகிரப்பட்ட வியூக இலக்குகளை நோக்கி நெருங்கி பணியாற்ற வேண்டியது மிக அவசியம். தற்போதைய நிலையில், பொருளாதார பாதுகாப்பு மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இருதரப்பு பொருளாதாரத்தை மட்டுமன்றி, உலகப் பொருளாதாரத்தையும் அபாயங்களில் இருந்து விடுவிக்கும் மகத்தான ஆற்றல், இந்தியா-ஜப்பான் கூட்டாண்மைக்கு உள்ளதாகவே நான் கருதுகிறேன். மீள்தன்மை கொண்ட விநியோக சங்கிலிகள், முக்கிய கனிமங்கள், எரிசக்தி சவால்கள், சுகாதாரம், தொழில்நுட்பம், கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் விரிவான விவாதங்கள் அவசியம்’ என்றாா்.