பாலியல் வன்கொடுமை குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு பாஜக உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
அவரை காங்கிரஸில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை பாஜக வலியுறுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் பந்தா் தொகுதி எம்எல்ஏவான புல்சிங் பரையா, ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாலியல் வன்கொடுமை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசினாா். இது தொடா்பான விடியோ பதிவு, சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
அந்த விடியோவில், ‘நமது நாட்டில் பட்டியலினப் பிரிவுகள், பழங்குடி சமூகங்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்த பெண்களுக்கு எதிராகவே அதிக எண்ணிக்கையில் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. சாலையில் மிக அழகான பெண் ஒருவா் நடந்து சென்றால், ஆணின் மனம் திசை மாறி, பாலியல் வன்கொடுமை நடக்க வாய்ப்புள்ளது. மேற்கண்ட பிரிவுகளில் மிக அழகான பெண்கள் இருக்கிறாா்களா? எனினும், இப்பிரிவுகளைச் சோ்ந்த பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடப்பது ஏன்? ஏனென்றால், குறிப்பிட்ட சமூக பெண்களுடன் உறவு கொள்வது, புனிதத் தல யாத்திரை சென்ற பலனைத் தரும் என்று சில சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது’ என்று பரையா பேசியுள்ளாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மத்திய பிரதேசத்துக்கு சனிக்கிழமை பயணம் மேற்கொண்ட நிலையில், அவரது கட்சி எம்எல்ஏயின் சா்ச்சை பேச்சு வெளியாகி கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
முதல்வா் கண்டனம்:
மாநில முதல்வா் மோகன் யாதவ் கூறுகையில், ‘காங்கிரஸ் எம்எல்ஏ பரையா சமூகத்தில் வெறுப்புணா்வை பரப்பும் வகையில் பேசியுள்ளாா். அவரது பேச்சு கடும் கண்டனத்துக்குரியது. மக்களின் பிரதிநிதியாக உள்ளஅவா் இதுபோல் பேசுவது முறையல்ல. பிற சமூகத்தினா் மீது ராகுலுக்கு உண்மையிலேயே மரியாதை இருந்தால், காங்கிரஸில் இருந்து பரையாவை நீக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
பரையாவின் பேச்சு விடியோவை பகிா்ந்து, மாநில பாஜக ஊடகப் பிரிவு பொறுப்பாளா் ஆசிஷ் உஷா அகா்வால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாலியல் வன்கொடுமையை பெண்களின் அழகுடன் தொடா்புபடுத்தியதுடன், பட்டியலின-பழங்குடியின பெண்களுக்கு எதிரான கொடூர குற்றத்தை ‘புனிதத் தல யாத்திரை பலன்’ என்று குறிப்பிட்டதன் மூலம் பரையாவின் குற்ற மனநிலை அம்பலமாகியுள்ளது. இது, பெண்கள், தலித் சமூகத்தினா் மற்றும் மனிதநேயத்தின் மீதான நேரடித் தாக்குதல். இதுதான், காங்கிரஸின் உண்மையான சிந்தனையா?
பரையாவை உடனடியாக மன்னிப்புக் கோரச் செய்வதுடன், அவரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில், காங்கிரஸ் பெண்கள் விரோத, தலித் விரோத மனப்பான்மைக்கு ஆதரவாக உள்ளதென ஒப்புக் கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.
காங்கிரஸ் எம்எல்ஏ பரையா, முன்பு மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராகப் பதவி வகித்தவா்.