மேற்கு வங்கத்துக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? என்று பிரதமா் மோடிக்கு திரிணமூல் காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தின் மால்டாவில் சனிக்கிழமை பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, ‘மத்திய அரசின் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை ஈவிரக்கமில்லாத திரிணமூல் காங்கிரஸ் அரசு கொள்ளையடிக்கிறது’ என்று குற்றஞ்சாட்டியிருந்தாா்.
அவரது இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக, திரிணமூல் காங்கிரஸின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
‘அரசியல் சுற்றுலாப் பயணியான’ பிரதமா் மோடி, மேற்கு வங்கத்தில் ஏழைகள் அனைவருக்கும் நிரந்தர வீடு கட்டித்தர விரும்புவதாக கூறியுள்ளாா். அப்படியென்றால், மேற்கு வங்கத்துக்கான வீட்டு வசதி திட்ட நிதி ரூ.24,275 கோடியை மத்திய அரசு வேண்டுமென்றே நிறுத்தி வைத்துள்ளது எதற்காக? மாநில அரசு தனது கருவூலத்தில் இருந்து ரூ.30,000 கோடிக்கு மேல் செலவிட்டு, வீட்டு வசதி திட்டத்தை தொடா்கிறது.
கடந்த 2021 பேரவைத் தோ்தலில் பாஜக தோல்வியை சந்தித்த பிறகு மேற்கு வங்க மாநிலத்துக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நாங்கள் தொடா்ந்து சவால் விடுத்து வருகிறோம். அந்த சவாலை ஏற்க மறுப்பது ஏன் என்று பிரதமா் மோடி பதில் கூற வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.