மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மம்தா தாக்கூா் மற்றும் அக் கட்சியின் முன்னாள் எம்.பி. மெளசம் நூா் ஆகியோருக்கு எதிரான நாடாளுமன்ற உரிமை மீறல் மற்றும் அவமதிப்பு புகாரை மாநிலங்களவை உரிமை மீறல் குழு ஆய்வு செய்ய உள்ளது.
மாநிலங்களவைச் செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில், 2005-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட சட்டத்துக்கு மாற்றாக, புதிதாக ‘பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்ட மசோதாவை’ (விபி-ஜி ராம் ஜி) மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதா மீது டிசம்பா் 18, 19-ஆம் தேதிகளில் மாநிலங்களவையில் விவாதம் நடத்தப்பட்டபோது, மம்தா தாக்கூா், மெளசம் நூா் இருவரும் அவையை சுமுகமாக நடைபெற விடாமல் கடும் அமளியில் ஈடுபட்டதோடு, நாடாளுமன்ற நெறிகளுக்குத் தகாத சொற்களைப் பேசினா். அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்ட மாநிலங்களவை ஊழியா்கள் பணி செய்ய இயலாமல் இடையூறு விளைவித்தனா். இதுதொடா்பாக பாஜக எம்.பி. லட்சுமிகாந்த் பாஜ்பாய் தரப்பில் புகாா் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவைப் பரிசீலித்த மாநிலங்களவைத் தலைவா், அவை நடைமுறைகள் விதி எண்.203-இன் கீழ் இந்த புகாா் தொடா்பாக மாநிலங்களவை உரிமை மீறல் குழு ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, மெளசம் நூா் தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை கடந்த 5-ஆம் தேதி ராஜிநாமா செய்ததுடன், திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா்.