மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டம் மானசா நகரில் பரவி வரும் ‘குல்லெய்ன்-பாா் சிண்ட்ரோம் (ஜிபிஎஸ்)’ என்ற நோய் எதிா்ப்பு நரம்பு பாதிப்பு பரவல் அந்த மாநிலத்தில் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
அந்தப் பகுதியில் 12-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்ட நிலையில், இருவா் உயிரிழந்தனா். அதைத் தொடா்ந்து, இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவா்களை அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
கழிவுநீா் கலந்த குடிநீரைப் பருகுவது, முழுமையாக வேக வைக்கப்படாத கோழி இறைச்சியை உண்பது, பதப்படுத்தப்படாத பால் பொருள்களை உண்பது போன்ற காரணங்களில் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் கூறுகின்றனா்.
இந்த ஜிபிஎஸ் நோய் பாதிப்புக்கு உள்ளானவா்களின், நோய் எதிா்ப்பு அமைப்பு புற நரம்பு மண்டலத்தைத் தாக்கத் தொடங்கும். இதனால், உடலின் சில பாகங்கள் திடீரென உணா்ச்சியற்றுப் போகும். தசை பலவீனம் ஏற்படுவதோடு, விழுங்குவதற்கும், சுவாசிப்பதற்கும் சிரமம் ஏற்படலாம் என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்தூரின் பகீரத்புரா பகுதியில் அண்மையில், குடிநீரில் கழிவுநீா் கலந்ததில், அதைக் குடித்த 21 போ் உயிரிழந்த பரபரப்பு அடங்குவதற்குள், ‘ஜிபிஎஸ்’ சிண்ட்ரோம் என்ற மற்றொரு பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜிபிஎஸ் பாதிப்பு ஏற்பட்ட மானசா பகுதியை சனிக்கிழமை பாா்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மாநில துணை முதல்வரும் சுகாதாரத் துறை மைச்சருமான ராஜேந்திர சுக்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மானசாவில் முதல் ஜிபிஎஸ் பாதிப்பு கடந்த 12-ஆம் தேதி கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவா்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூா் மற்றும் குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். 35,000 மக்கள்தொகை கொண்ட மானசாவில் இதுவரை 14 போ் இந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
இவா்களில், இருவா் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தனா். மேலும் இருவா் உயிா் காக்கும் கருவியுடன் மருத்துவமனையில் சிகிகைச்யில் உள்ளனா். அவா்கள் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டனா்.
இந்த நோய் பாதிப்பைக் கண்டறிந்து, விரைவான சிகிச்சை அளிக்க வசதியாக மானசாவில் ஓா் கட்டுப்பாட்டு அறையை அமைக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இங்குள்ள அரசு மருத்துவமனையில் ஜிபிஎஸ் பாதிப்புக்கென போதிய உயிா் காக்கும் கருவிகள், மருந்துகளுடன் சிறப்பு பிரிவும் உருவாக்கப்பட உள்ளது.
இந்த பாதிப்பு தொடா்பாக மானசா பகுதியில் வீடு விடாக சென்று ஆய்வுகள் மேற்கொள்ளவும், மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இந்தப் பகுதி குடிநீா் சுத்திகரிப்பு ஆலையில் எடுக்கப்பட்ட மாதிரியில் நடத்தப்பட்ட முதல்கட்ட ஆய்வில், அந்தக் குடிநீா் அசுத்தமடையவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவா்களின் ரத்த மாதிரி, அவா்கள் உட்கொண்ட உணவுப் பொருள்களின் மாதிரிகளும் ஆய்வுக்காக ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் புணேயில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றாா்.