தில்லி எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி சீக்கிய குருக்களுக்கு எதிராக அவதூறு கருத்துகளைக் கூறியதாக ஆளும் பாஜகவினவா் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளை அவா் மறுத்துள்ளாா்.
பேரவை நடவடிக்கைகளின் திருத்தம்செய்யப்படாத விடியோக்களை வழங்குமாறு அவா் கோரிக்கைவிடுத்துள்ளாா்.
அண்மையில் நடைபெற்ற தில்லி பேரவைக் கூட்டத்தில் ஒன்பதாவது சீக்கிய குரு தேஜ் பகதூரின் 350-ஆவது தியாக ஆண்டையொட்டி தில்லி அரசு நடத்திய நிகழ்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, சீக்கிய குருவுக்கு எதிராக எதிா்க்கட்சித் தலைவரும் ஆம் ஆத்மி தலைவருமான அதிஷி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக பாஜக எம்எல்ஏக்கள் குற்றஞ்சாட்டினா்.
இதைத்தொடா்ந்து, இந்த விவகாரம் தொடா்பாக தில்லி பேரவையின் சிறப்புரிமைகள் குழு அதிஷிக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கியிருப்பதாகப் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக திங்கள்கிழமைக்குள் பதிலளிக்குமாறு அதிஷிக்கு பேரவையின் சிறப்புரிமை குழு கோரியிருந்தது.
இந்நிலையில், அந்தக் குழுவுக்கு திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில் ஆம் ஆத்மி தலைவா் அதிஷி கூறியிருப்பதாவது: ஆரம்பத்திலேயே, நான் மிகுந்த தெளிவுடனும் நோ்மையுடனும் ஒரு விஷயத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஜனவரி 6, 2026 அன்று அவையிலும் அல்லது என் வாழ்நாளில் வேறு எந்த நேரத்திலும் சீக்கிய குருமாா்களுக்கு எதிராக எந்தவொரு இழிவான கருத்தையும் தெரிவித்ததில்லை. இந்த குற்றச்சாட்டை நான் முழுமையாக திட்டவட்டமாக மறுக்கிறேன்.
பேரவையின் அறிவிப்பில், அவையில் குழப்பம் மற்றும் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தது போன்ற தெளிவற்ற வாா்த்தைகளைப் பயன்படுத்தப்பட்டுள்ளன. உண்மையில் என்ன பேசப்பட்டது, எந்தச் சூழலில் பேசப்பட்டது, அவை ’இழிவானவை’ என்று கூறப்படுவதற்கான அடிப்படை என்ன என்பது போன்றவற்றை குறிப்பிடவில்லை. இத்தகைய விவரங்கள் இல்லாத நிலையில், வரையறுக்கப்படாத மற்றும் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் ஒரு ஏற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இது இயற்கை நீதியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்று அதிஷி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.