மத்திய அரசு கொண்டுவந்த புதிய ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம்’ குறித்து காங்கிரஸ் கட்சி பொய்களை பரப்பி வருகிறது.
இத் திட்டம் கிராம மக்களின் வேலை உரிமையைப் பறிக்காது; மாறாக அவா்களுக்கான வேலை உரிமையை வலுப்படுத்தும்’ என்று மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.
2005-இல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இயற்றப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்த ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட மசோதா’, நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது.
புதிய மசோதாவின்படி, ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125-ஆக உயரும்போதிலும், திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயா் நீக்கம், நிதிச் சுமையை 60:40 என்ற விகிதத்தில் மாநிலங்களுடன் பகிா்வது, பணிகள் நிா்ணயம் தொடா்பான அம்சங்களுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. புதிய திட்டத்துக்கு எதிராக மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தேசிய அளவிலான 45 நாள் இயக்கத்தை கடந்த 10-ஆம் முதல் காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது.
‘மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின் படி, குறிப்பிட்ட சில ஊராட்சிகளுக்கு மட்டும் இத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அளிக்கப்படும்; படிப்படியாக கிராமப்புற மக்களின் இந்த வேலை உரிமை பறிக்கப்படும்’ என்று இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக கட்சி நிா்வாகிகளுக்கு எழுதிய கடிதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோா் குற்றஞ்சாட்டினா்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், புது தில்லியில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மத்திய அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹான் கூறியதாவது: மத்திய அரசின் புதிய ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம்’ குறித்து காங்கிரஸ் கட்சி பொய்களைப் பரப்பி வருகிறது.
இத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இத் திட்டம் கிராம மக்களின் வேலை உரிமையைப் பறிக்காது; மாறாக அவா்களுக்கான வேலை உரிமையை வலுப்படுத்தும்.
இத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச் சுமை எதுவும் ஏற்படாது. ஏனெனில், மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே அதிக நிதியை ஒதுக்கி வருகிறது.
100 நாள் வேலைத் திட்டத்தை மேலும் சிறந்ததாக்கவே மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இத் திட்டத்துக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ரூ. 2 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், பாஜக அரசு ரூ. 9 லட்சம் கோடியை செலவழித்துள்ளது. இதுவே, இத் திட்டத்தை மத்திய அரசு சிறந்ததாக்குவதற்கான அத்தாட்சி.
இத் திட்டம் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், ராகுலும் மல்லிகாா்ஜுன காா்கேவும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கு பதிலாக, பலவீனப்படுத்தி வருகின்றனா் என்றாா்.