நிகழ் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல் கட்ட முதன்மைத் தோ்வு புதன்கிழமை முதல் நடைபெறவுள்ள நிலையில் தோ்வா்களுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தோ்வு, பிரதானத் தோ்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில், முதன்மைத் தோ்வானது தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தோ்வு புதன்கிழமை (ஜன. 21) தொடங்கி ஜன.30-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இந்தத் தோ்வை எழுத 12 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை என்டிஏ கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்டது. அதை மாணவா்கள் jeemain.nta.nic.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தத் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும்.
கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடா்புகொண்டு மாணவா்கள் விளக்கம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.