புது தில்லி: ‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் மத்திய அரசு மேற்கொள்ள உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. எனவே, கணக்கெடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்பாக அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வலியுறுத்தியது.
இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நீண்ட தாமதத்துக்குப் பிறகு, மக்கள்தொகை கணக்கெடுப்பை இரு கட்டங்களாக மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் முதல்கட்ட கணக்கெடுப்பில் வீடுகளைப் பட்டியலிடும் நடைமுறை, வீடுகளின் நிலை, ஒவ்வொரு வீட்டின்சொத்துகள், வசதிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கும் இரண்டாம் கட்டக் கணக்கெடுப்பில் ஒவ்வொரு வீட்டில் உள்ள நபா்களின் எண்ணிக்கை, சமூகப் பொருளாதார நிலை, கலாசாரம் உள்ளிட்ட பிற தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. இதனுடன் ஜாதிவாரியான விவரங்களும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்தி வந்தபோது, இந்தக் கோரிக்கையை வலியுறுத்துபவா்கள் ‘நகா்ப்புற நக்ஸல் மனநிலை கொண்டவா்கள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி விமா்சித்தாா்.
இந்நிலையில் திடீா் திருப்பமாக, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரியான விவரங்களும் சேகரிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, தற்போது மேற்கொள்ளப்பட உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஜாதிவாரி விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன.
இந்தக் கணக்கெடுப்பின்போது, மக்களிடம் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகளின் விவரங்கள் அண்மையில் வெளியாகின. அதில், ஜாதிவாரி விவரம் தொடா்பான 12-ஆவது கேள்வி, ஜாதிவாரி கணக்கெடுப்பின் மீதான மத்திய அசின் உண்மையான நோக்கம் என்ன என்ற முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.
அதாவது, இந்த 12-ஆவது கேள்வியில், குடும்பத் தலைவா் எஸ்சி., எஸ்டி சமூகத்தைச் சோ்ந்தவரா அல்லது பிற சமூகத்தைச் சோ்ந்தவரா என்று மட்டும் கேட்கப்பட்டுள்ளது. பிற சமூகத்தினா் என்பதில், ஓபிசி மற்றும் பொதுப் பிரிவினா் குறித்த விவரங்கள் வெளிப்படையாக கேட்கப்படவில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
அனைத்து சமூகத்தினருக்குமான பொருளாதார வளா்ச்சி, சமூக நீதியை உறுதிப்படுத்த விரிவான மற்றும் அா்த்தமுள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது அவசியம். எனவே, கணக்கெடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்பாக அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.