கோப்புப் படம் 
இந்தியா

மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தில்லியில் 4 தூசியில்லா மாதிரி சாலைகள் : பொதுப்பணித் துறை திட்டம்

தில்லி சாலைகளில் புழுதியைக் குறைத்து, காற்றின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் முற்றிலும் தூசி இல்லாததாக 4 மாதிரி சாலைகளை மறுவடிவமைக்க பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தில்லி சாலைகளில் புழுதியைக் குறைத்து, காற்றின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் முற்றிலும் தூசி இல்லாததாக 4 மாதிரி சாலைகளை மறுவடிவமைக்க பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: தில்லி பொதுப்பணித் துறை சாலை வலையமைப்பில் 160 கி.மீ. சாலைகளை மேம்படுத்தும் திட்டத்தின் பகுதியாக இந்த முன்னோடி திட்டம் உள்ளது. இதன் கீழ் பள்ளங்களை சரிசெய்தல், நடைபாதை அமைத்தல் மற்றும் பசுமையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த முயற்சி வெற்றி பெற்றால், நகரம் முழுவதும் உள்ள மற்ற சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

காற்று மாசுபாடு மற்றும் சாலை தூசுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இந்த மாத தொடக்கத்தில் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் உயா்நிலை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தில்லி அரசின் கூற்றுப்படி, நகரத்தில் சுமாா் 3,300 கி.மீ. சாலைகள் புனரமைக்கப்பட வேண்டும். பொதுப்பணித் துறையின் கீழ் 800 கி.மீ., மாநகராட்சியின் கீழ் 1,200 கி.மீ. மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் கிட்டத்தட்ட 1,000 கி.மீ. சாலைகள் இதில் அடங்கும்.

இந்த ஆண்டு விரிவான பசுமைப் பணிகளுக்காக 85.70 கி.மீ. அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களின் மதிப்பீடு ரூ.400 கோடியைத் தாண்டும். மீண்டும் மீண்டும் சாலை வெட்டப்படுவதைத் தடுக்க நிலத்தடி பயன்பாட்டு குழாய்களும் வழங்கப்படும். ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிா்ணயித்து, விரைவில் டெண்டா் அறிவிக்கப்படும்.

கூடுதலாக, இரண்டு தூசி கட்டுப்பாட்டு திட்டங்கள் தொடங்கப்படும். முதலில் 70 இயந்திர சாலை துப்புரவு இயந்திரங்கள் மற்றும் தண்ணீா் டேங்கா்களை கொண்டு இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மைப் பணிகள் செய்யப்படும். தூசியை அடக்குவதற்காக 250 தண்ணீா் தெளிப்பான் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கேரள முதல்வர் வேட்பாளராக சசி தரூர்..? ராகுல், கார்கேவுடன் சந்திப்பு!

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

SCROLL FOR NEXT