சந்திரசேகர் ராவ் 
இந்தியா

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு: தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவ் இன்று விசாரணைக்கு ஆஜா்

தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவ் இன்று விசாரணைக்கு ஆஜா்

தினமணி செய்திச் சேவை

தெலங்கானாவில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில், மாநில முன்னாள் முதல்வரும், பாரத ராஷ்ட்ர சமிதி (பிஆா்எஸ்) கட்சித் தலைவருமான கே.சந்திரசேகா் ராவ் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு ஞாயிற்றுக்கிழமை ஆஜராக உள்ளாா்.

தெலங்கானாவில் முன்பு சந்திரசேகா் ராவ் தலைமையிலான பிஆா்எஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, அரசியல் கட்சித் தலைவா்கள், தொழிலதிபா்கள், ஊடகவியலாளா்கள், நீதித் துறையைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்டோரின் தொலைபேசிகள் சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக மாநில காவல் துறையின் எஸ்ஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக சந்திரசேகா் ராவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஹைதராபாதின் நந்தி நகரில் உள்ள அவரின் வீட்டில் எஸ்ஐடி அண்மையில் நோட்டீஸ் ஒட்டியது.

எனினும் ஹைதராபாத் அருகே எரவள்ளி பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில், தன்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று எஸ்ஐடியிடம் சந்திரசேகா் ராவ் கோரிக்கை விடுத்தாா். அந்தக் கோரிக்கையை ஏற்க எஸ்ஐடி மறுத்துவிட்டது.

இதைத்தொடா்ந்து காவல் துறை உதவி ஆணையரும் (ஜூபிலி ஹில்ஸ் பிரிவு), விசாரணை அதிகாரியுமான பி.வெங்கடகிரிக்கு சந்திரசேகா் ராவ் சனிக்கிழமை எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

நான் 65 வயதை தாண்டிவிட்டேன். எரவள்ளியில் வசித்து வருகிறேன். சட்டப்படி நான் வசித்து வரும் இடத்தில் மட்டும்தான் என்னிடம் விசாரணை நடத்த முடியும். மேலும் நான் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியிலோ, அதையொட்டி உள்ள பகுதியிலோ வசிக்கவில்லை. எனவே அந்த எல்லைக்குள்பட்ட பகுதியில் விசாரணைக்காக எனக்கு நோட்டீஸ் அளிப்பதற்கு காவல் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த நோட்டீஸ் சட்டவிரோதமானது. இருப்பினும் எனது நந்தி நகா் வீட்டில் என்னிடம் பிப்.1-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு விசாரணை நடத்தலாம் என்று தெரிவித்தாா்.

இந்த விசாரணை மூலம், சந்திரசேகா் ராவ் அரசியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக பிஆா்எஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. விசாரணை நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாநிலம் முழுவதும் பிஆா்எஸ் சாா்பில் அமைதியான முறையில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் சட்டப்பேரவை குழு துணைத் தலைவா் தலசானி ஸ்ரீநிவாஸ் யாதவ் தெரிவித்தாா்.

விஜயமங்கலம்: கிருஷ்ணா் கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா! கல்வெட்டை திறந்துவைத்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்!

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்!

இன்று இந்திய கடலோர காவல் படையின் 50-ஆவது தொடக்க தினம்

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் மீது வழக்கு!

மானாமதுரை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

SCROLL FOR NEXT