FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புதிய வடிவத்தில் "ஆரோக்கிய சேது 2.0' செயலி: குடும்ப உடல் நலனை நிர்வகிக்க சிறப்பு வசதிகள்

கரோனா காலகட்டத்தில் குடிமக்களின் அன்றாட செயல்பாடுகளுக்குத் தவிர்க்க முடியாததாக விளங்கிய "ஆரோக்கிய சேது' செயலி, இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் அறிமுகமாகியுள்ளது.

பகிர்:

நமது சிறப்பு நிருபர்

கரோனா காலகட்டத்தில் குடிமக்களின் அன்றாட செயல்பாடுகளுக்குத் தவிர்க்க முடியாததாக விளங்கிய "ஆரோக்கிய சேது' செயலி, இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் அறிமுகமாகியுள்ளது.

தில்லியில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா "ஆரோக்கிய சேது 2.0' செயலியை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார்.

Advertisement

Advertisement

"ஆயுஷ்மான் பாரத்' எண்ம திட்டத்தின் (ஏபிடிஎம்) கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள இந்தச் செயலி, இனி வெறும் தொற்றுநோய் கண்காணிப்புக்காக மட்டுமன்றி, ஒவ்வோர் இந்தியரின் 'எண்ம மருத்துவ நாள்காட்டி' ஆக மாறவிருக்கிறது.இதன் 6 முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஒரே கணக்கில் முழு குடும்பமும்: இனி வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனித்தனி திறன்பேசிகளில் ஆரோக்கிய சேது செயலியை நிறுவத் தேவையில்லை. "ஆரோக்கிய சேது 2.0' செயலியில் ஒரே கணக்கின் கீழ் பெற்றோர், கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகளின் மருத்துவ விவரங்களை இணைத்து நிர்வகிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏஐ மருத்துவ ஆவணங்கள்: உங்கள் பழைய பரிசோதனை அறிக்கைகள், மருந்துச் சீட்டுகளை, பிடிஎஃப் அல்லது புகைப்படமாக செயலியில் பதிவேற்றம் செய்தால் போதும். அதில் உள்ள ஏஐ தொழில்நுட்பம், சீட்டில் உள்ள தகவல்களை உடனடியாக எண்ம ஆவணங்களாக மாற்றி, உங்களுக்கான பிரத்யேக சுகாதார தகவல் பலகையை (ஹெல்த் டேஷ்போர்ட்) உருவாக்கித் தரும்.

பிஎம்-ஜேஏஒய் வாலெட்: மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள், தங்களுக்கு இன்னும் எவ்வளவு மருத்துவக் காப்பீட்டுத் தொகை பாக்கி உள்ளது, குடும்பத்தில் யார், யார் எவ்வளவு பயன்படுத்தியுள்ளனர் என்ற விவரங்களை இந்த "வாலெட்' மூலம் வெளிப்படையாக, உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட் வாட்ச்சுடன் இணைக்கும் வசதி: உங்களின் ஸ்மார்ட் வாட்ச்சில் உடல்தகுதியைப் பின்தொடருதல் (ஃபிட்னஸ் டிராக்கர்) வசதியை இந்தச் செயலியில் இணைத்துக்கொள்ளலாம். இதன்மூலம் உங்களின் தினசரி நடைப்பயிற்சி, இதயத் துடிப்பு, கலோரி எரிப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவைச் செயலியே தொடர்ந்து கண்காணிக்கும்.

அவசரகால உதவிகள்: உங்கள் இருப்பிடத்துக்கு அருகே இருக்கும் மருத்துவமனைகள் மட்டுமன்றி, "இ-ரக்த்கோஷ்' (e-RaktKosh) மூலம் அருகில் உள்ள ரத்த வங்கிகளில் தற்போதைய ரத்த இருப்பு விவரம் மற்றும் அவசரஊர்தியை முன்பதிவு செய்யும் வசதியும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

மருந்து நினைவூட்டல்: மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை சரியான நேரத்துக்கு நோயாளி உட்கொள்வதை உறுதி செய்ய, "டோஸ்' மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு "நினைவூட்டல்' நிர்ணயித்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. மருத்துவமனைகளில் வரிசையில் நிற்காமல் "ஸ்கேன் அண்ட் ஷேர்' முறையில் புறநோயாளி சிகிச்சை (ஓபிடி) பெறும் வசதி இந்தச் செயலியில் நிறுவப்பட்டுள்ளது.

எப்படி நிறுவுவது?

கைப்பேசி செயலி பதிவிறக்க தளத்தில் ஆரோக்கிய சேது (Aarogya Setu) என ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து வழக்கமான செயலியைப் பதிவிறக்கம் செய்தால் "ஆரோக்கிய சேது 2.0' என்ற செயலி பதிவிறக்கமாகும். பிறகு செயலிக்குரிய அனுமதியை பயனர் வழங்கியதும், ஆங்கிலம், தமிழ் உள்பட தங்களுடைய விருப்ப மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு பயனர் தன்னுடைய கைப்பேசி எண்ணை உள்ளீடு செய்தவுடன் கடவுச்சொல் அனுப்பி வைக்கப்படும். அதை செயலியில் குறிப்பிட்டவுடன், பயனரின் ஆதார் எண்ணில் உள்ள தரவுகளை செயலி காண்பிக்கும். அதில் உங்களுடைய பெயருக்குரிய தரவை தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பிறகு சுகாதார லாக்கரில் விவரங்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்காவிட்டால் உங்களுடைய ஆதார் எண்ணை செயலி கேட்கும். அதை உள்ளீடு செய்த பிறகு மீண்டும் 6 இலக்க கடவுச்சொல் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். அதை உள்ளீடு செய்த பிறகு ஓராண்டுக்கு செல்லத்தக்க தரவு சரிபார்ப்புக்கான அனுமதி உங்களிடம் பெறப்படும். அதற்கு நீங்கள் அனுமதி வழங்கியவுடன் சுகாதார "லாக்கர்' வெற்றிகரமாக திறக்கப்பட்டதாக செயலியில் தகவல் வரும்.

இந்த நடைமுறைக்குப் பிறகு குடும்ப மேலாண்மை பிரிவில் "குடும்பத்தை நிர்வகி' என்ற பகுதிக்குள் சென்றால் குடும்ப உறுப்பினர்களின் தரவுகளை பதிவேற்றிக் கொள்ளலாம். இதேபோல, மேற்குறிப்பிட்ட ஆறு அம்ச சேவைகளுக்கான தகவல்களையும் பெற தனித்தனி இணைப்புகள் செயலியில் இடம்பெறும். அதைச் சரியாக உள்ளீடு செய்து பலன் அடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments