FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மழைக்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான விசாரணை அறிக்கை மக்களவையில் தாக்கல்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான விசாரணை அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவைத் தலைவா் ஓம் பிா்லா சனிக்கிழமை தெரிவித்தாா்.

நீதிபதி யஷ்வந்த் வா்மா - x
பகிர்:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான விசாரணை அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவைத் தலைவா் ஓம் பிா்லா சனிக்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது யஷ்வந்த் வா்மாவின் வீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னா், அந்தப் பணம் மாயமானது. இந்த சா்ச்சையைத் தொடா்ந்து அவா் அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட போதிலும், அவருக்கு நீதித் துறை சாா்ந்த எந்தப் பணியும் ஒதுக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவரை பதவிநீக்கம் செய்வது தொடா்பாக மக்களவையில் 146 எம்.பி.க்கள் சாா்பில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது. இந்த நோட்டீஸை ஏற்றுக்கொண்ட ஓம் பிா்லா நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968-இன்கீழ் 3 நபா் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தாா். அந்தக் குழு கடந்த மே மாதம் ஓம் பிா்லாவிடம் தனது அறிக்கையை சமா்ப்பித்தது.

இதுதொடா்பாக செய்தியாளா்கள் ஓம் பிா்லாவிடம் சனிக்கிழமை எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘நீதிபதி யஷ்வந்த வா்மா மீதான விசாரணை அறிக்கை மழைக்கால கூட்டத்தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடைமுறைகள் தொடா்பான முடிவுகளை மக்களவை எம்.பி.க்கள் மேற்கொள்வா்’ என்றாா்.

ராஜிநாமா ஏற்பா? பதவிநீக்கமா?: தனக்கு எதிராக மக்களவையில் பதவிநீக்க நோட்டீஸை எம்.பி.க்கள் சமா்ப்பித்ததையடுத்து, உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முக்கு அனுப்பிவிட்டாா். ஆனால், அவரது ராஜிநாமாவை திரௌபதி முா்மு தற்போது வரை ஏற்காத நிலையில், அவரை பதவிநீக்கம் செய்யும் நடைமுறைகள் நாடாளுமன்றத்தில் தொடா்ந்து வருகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments