திரிணமூல் காங்கிரஸின் அனைத்து அமைப்புகளும் கலைப்பு!
அனைத்து அமைப்புகளையும் திரிணமூல் காங்கிரஸ் கலைத்திருப்பது பற்றி...
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து அமைப்புகளும், அணிகளும் கலைக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், 15 ஆண்டுகள் மாநிலத்தை ஆட்சி செய்துவந்த மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் 80 தொகுதிகளில் மட்டுமே வென்று பெருந்தோல்வியைச் சந்தித்தது.
பாஜக 207 தொகுதிகளில் வென்று முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வராகப் பொறுப்பேற்றார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக சோபன்தேவ் சட்டோபாத்யாய தேர்வு செய்யப்பட்டது சர்ச்சையாகி இருக்கிறது.
அவருக்கு எதிராக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பலர் போர்க் கொடி தூக்கியிருக்கும் நிலையில், மமதா பானர்ஜியின் நிகழ்ச்சிகளையும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் புறக்கணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கட்சியின் அனைத்து அமைப்புகளும், அணிகளும் கலைக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“தீவிர பரிசீலனைக்குப் பிறகு, திரிணமூல் காங்கிரஸின் அனைத்து குழுக்களும், அமைப்புகளும் உடனடியாக கலைக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து நிலைகளிலும், கட்சி சார்பில் சுயபரிசோதனை, செயல்பாட்டு ஆய்வு மற்றும் அமைப்புசார் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும். விரிவான ஆய்வுக்குப் பிறகு, கட்சியின் அமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள்.
கட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதிலும், புதுப்பிக்கப்படுவதிலும், வீரியத்துடனும் உறுதியுடனும் எதிர்கால சவால்களை எதிகொள்ளும் வகையில் தயார்படுத்துவதில் கட்சி தொடர்ந்து உறுதியுடன் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.