காக்கிநாடா குழந்தை மாயம்! பொம்மைக்குள் கறித் துண்டுகளை வைத்தும் சோதித்த போலீஸ்!
காக்கிநாடா குழந்தை மாயமான சம்பவத்தில் பொம்மைக்குள் கறித் துண்டுகளை வைத்து சோதித்ததிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
காக்கிநாடாவைச் சேர்ந்த 2 வயது குழந்தை ஜூன் 6ஆம் தேதி காணாமல் போன நிலையில், இரண்டு வாரங்கள் ஆகியும் பொம்மை வைத்து, கேமராக்களை ஆய்வு செய்து, டிரோன்கள் மூலமும், 400 காவல்துறையினர் தேடியும் இதுவரை ஒரு சிறு துப்பு கூட கிடைக்கவில்லை.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பாமாயில் பண்ணைக்கு அருகே வாழ்ந்து வந்த தம்பதிகளின் 2 வயது குழந்தையை பேரிடர் மீட்புப் படை வீரர்களும் தேடி வருகிறார்கள்.
அப்பகுதி அடர்ந்த வனப்பகுதிபோன்ற கிராமம் என்பதால் வனவிலங்குகள் குழந்தையை தூக்கிச் சென்றிருக்குமா என்ற அச்சம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதனை உறுதி செய்வதற்காக காவல்துறையினர், வனப்பகுதிக்கு அருகே குழந்தையைப் போன்ற பொம்மைகளை உருவாக்கி அதற்குள் கறித் துண்டுகளை வைத்தனர். இரண்டு பொம்மைகளை வேறு வேறு இடங்களில் அவர்கள் வைத்துப் பார்த்தனர்.
ஆனால், அந்த பொம்மை இருக்கும் இடத்துக்கு அருகே எந்த வன விலங்கும் வரவில்லை. எனவே, வன விலங்கு குழந்தையை தூக்கிச் சென்றிருக்கும் என்பதை உறுதி செய்ய முடியாமல் போனது.
தற்போது காணாமல் போன குழந்தை பற்றி ஏதேனும் துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வீட்டுக்கு வெளியே குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, தந்தை பண்ணைக்குச் செல்வதைப் பார்த்து அவர் பின்னால் சென்றிருக்கிறது. தந்தையும் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த வீட்டு வாசலில் விட்டுவிட்டு, மனைவியிடம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.
மனைவியோ, குழந்தை வீட்டுக்குள்தானே இருக்கிறது என்று நினைத்திருக்கிறார். ஆனால், குழந்தை வாசலை தாண்டி வெளியே சென்ற நிலையில் மாயமானது தெரிய வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வந்தாலும், குழந்தைக்கு என்னவாகியிருக்கும் என்ற கேள்விக்குறிக்கு இன்னும் விடைதெரியாமல் கலங்கி நிற்கிறது ஒட்டுமொத்த கிராமமும்.
Missing child in Kakinada! Police even tested a doll stuffed with pieces of meat!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.