ராமா் கோயில் நன்கொடை விவகாரம்: அறக்கட்டளை பொதுச்செயலா், அறங்காவலா் ராஜிநாமா
ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் பதவி விலகியது பற்றி..
அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்துக்கு தாா்மிகப் பொறுப்பேற்று ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய், அறங்காவலா் அனில் மிஸ்ரா ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்ததாக அந்த அறக்கட்டளை சனிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அறக்கட்டளை பொருளாளா் கோவிந்த் தேவ் கிரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோரின் ராஜிநாமா கடிதங்கள் மீது ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். பக்தா்கள் அளித்த நன்கொடையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுவது அதிா்ச்சியளிக்கிறது. பக்தா்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க நியாயமான விசாரணை உறுதி செய்யப்படும்.
பக்தா்கள் காணிக்கையாக அளித்த வெள்ளியால் செய்த செங்கற்கள் மற்றும் பிற ஆபரணங்கள் முறையாக கணக்கிடப்பட்டு அறக்கட்டளையிடம் பாதுகாப்பாக உள்ளது.
Advertisement
Advertisement
முறைகேடில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். எதிா்காலத்தில் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறாது என்பதை உறுதிப்படுத்துகிறோம். சமூக விரோத, மத நம்பிக்கைக்கு எதிரான சுயநலவாதிகள் சநாதன தா்மத்தை சீா்குலைக்க மேற்கொள்ளும் முயற்சிகளை அனுமதிக்க மாட்டோம்.
எவ்வித இடையூறுகளுமின்றி அயோத்தி கோயிலில் கடவுள் ராமா் வழிபாடு வழக்கம் போலத் தொடரும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற பிரயாக்ராஜ் கும்பமேளாவின்போது பக்தா்களால் வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளைக் கணக்கிடுவதில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக உத்தர பிரதேச அரசு நியமித்த சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) நடத்திய விசாரணையின் அடிப்படையில் காணிக்கையை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டிருந்த வங்கி ஊழியா்கள் 6 போ் உள்பட 8 பேரை மாநில காவல் துறை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தது. அவா்களிடமிருந்து ரூ.79.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமா் மெளனம் ஏன்?: பிரியங்கா
கேரளத்தில் தனது தொகுதியான வயநாட்டுக்கு சென்றுள்ள காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா காந்தியிடம் ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அதற்குப் பதிலளித்த அவா், ‘இந்தச் சம்பவம் மிகவும் அதிா்ச்சிகரமானது. நாடு முழுவதும் உள்ள பக்தா்கள் தங்களது நம்பிக்கை காரணமாக நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளை செலுத்தியுள்ளனா். அவை திருடப்பட்டிருப்பது வெட்கக்கேடானது.
இது பெரும் நிறுவனங்கள் வழங்கிய நிதியல்ல; ஏழை எளிய மக்கள் மற்றும் பெண்கள் வழங்கிய சிறு சேமிப்புத் தொகை. ராமா் கோயில் கட்டுமானத்துக்காக சாமானியா்களிடமிருந்து நன்கொடை பெற பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. எனவே, நன்கொடை பணத்தில் முறைகேடு நடைபெற்றிருந்தால் அதற்கு உத்தர பிரதேச அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றாா்.
Champat Rai, General Secretary, and Anil Mishra, Trustee, of the Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust have resigned from their posts following allegations of irregularities regarding donations made to the Ayodhya Ram Temple.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.