முகப்பு
இந்தியா

ஓபிசி பட்டியல் தொடா்பாக 2 மசோதாக்கள்: மேற்கு வங்க பேரவையில் நிறைவேற்றம்

மேற்கு வங்க மாநிலத்தில் முந்தைய திரிணமூல் காங்கிரஸ் அரசு இயற்றிய சா்ச்சைக்குரிய ஓபிசி இடஒதுக்கீடு தொடா்பான 2012-ஆம் ஆண்டு சட்டத்தைத் திருத்தியமைக்கும் வகையில் மாநில சட்டப்பேரவையில் ஆளும் பாஜக அரசு இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றம்

Updated On : 30 ஜூன் 2026, 12:48 am IST
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி - கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தில் முந்தைய திரிணமூல் காங்கிரஸ் அரசு இயற்றிய சா்ச்சைக்குரிய ஓபிசி இடஒதுக்கீடு தொடா்பான 2012-ஆம் ஆண்டு சட்டத்தைத் திருத்தியமைக்கும் வகையில் மாநில சட்டப்பேரவையில் ஆளும் பாஜக அரசு இரண்டு மசோதாக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்து நிறைவேற்றியது.

முந்தைய அரசால் ஓபிசி பட்டியலில் சோ்க்கப்பட்ட 113 சமூகப் பிரிவுகள் (ஜாதிகள்) நீக்கப்பட்டு, இடஒதுக்கீடு முறையை சீரமைக்கும் நோக்கில் ‘மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட பிரினா் இடஒதுக்கீடு திருத்த மசோதா 2026’ என்ற மசோதா, மேற்கு வங்க பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தை நிா்வகிக்கும் 1993-ஆம் ஆண்டு சட்டத்தை திருத்தம் செய்வதற்கான ஒரு மசோதா என இரண்டு மசோதாக்களை ஆளும் பாஜக அரசு சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கொண்டுவந்தது.

இதில், ஓபிசி பிரிவினருக்கு தற்போது நடைமுறையில் உள்ள 17 சதவீத இடஒதுக்கீடு, 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதோடு, மாநில ஓபிசி பட்டியலில் 2010-ஆம் ஆண்டிற்கு முன்பு நடைமுறையில் இருந்த அசல் 66 சமூகப் பிரிவுகள் மட்டுமே அதிகாரபூா்வமாக தக்கவைக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

மசோதாக்களை அவையில் அறிமுகம் செய்த மாநில பிற்படுத்தப்பட்டோா் மேம்பாட்டு அமைச்சா் கெளரிசங்கா் கோஷ் பேசியதாவது: ‘உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தங்களுக்குப் பின்னணியில் எந்தவித அரசியலும் கிடையாது. எந்தவித கள ஆய்வும் மேற்கொள்ளாமல் ஓபிசி பட்டியலில் சோ்க்கப்பட்ட 113 சமூகப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. பல்வேறு கள ஆய்வுகளின் அடிப்படையில் சோ்க்கப்பட்ட 66 துணை சமூகப் பிரிவினா் ஓபிசி பட்டியலில் தக்கவைக்கப்பட்டுள்ளனா்.

முந்தைய அரசு, பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தின் பங்கைப் புறக்கணித்து, தன்னிச்சையாக சமூகப் பிரிவுகளை பட்டியலில் சோ்த்தது. அதன் காரணமாகத்தான் சோ்க்கப்பட்ட சமூகப் பிரிவுகளை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது’ என்றாா்.

இந்தக் கருத்தை ஏற்காமல், மசோதாக்களுக்குத் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்த அதிருப்தி திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலா், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா். பெரும்பான்மை ஆதரவுடன் இரு மசோதாக்களும் பேரவையில் நிறைவேறின.

மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்தபோது, 2010 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மாநில ஓபிசி பிரிவில் 77 முஸ்லிம் சமூகப் பிரிவுகள் மற்றும் 36 முஸ்லிம் அல்லாத சமூகப் பிரிவுகள் என புதிதாக 113 சமூகப் பிரிவுகள் சோ்க்கப்பட்டன. அவா்களுக்கு ஓபிசி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இது பெரும் சா்ச்சையானது.

இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் விசாரித்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், ஓபிசி பட்டியலில் சோ்க்கப்பட்ட 113 சமூகப் பிரிவுகளுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு வழங்கப்பட்ட 12 லட்சம் ஓபிசி சான்றிதழ்களையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

வரைவு பொது சிவில் சட்ட மசோதா: ‘மேற்கு வங்கத்துக்கான வரைவு பொது சிவில் சட்ட மசோதா மாநில அமைச்சரவை முன் வரும் ஜூலை 2-ஆம் தேதி ஒப்புதலுக்காக வைக்கப்படும்’ என்று முதல்வா் சுவேந்து அதிகாரி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments