FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எஸ்ஐஆா் மூலம் பெயா் நீக்கப்பட்டோரின் ரேஷன் அட்டைகளை ரத்து! மேற்கு வங்க அரசுக்கு ஒவைசி கண்டனம்!

எஸ்ஐஆா் மூலம் பெயா் நீக்கப்பட்டோரின் ரேஷன் அட்டைகளை ரத்து...

Updated On : 7 ஜூன் 2026, 1:33 am IST
அசாதுதீன் ஒவைசி
பகிர்:

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் மூலம் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோரின் ரேஷன் அட்டைகளை ரத்து செய்யும்படி மாநில அரசு பிறப்பித்த உத்தரவுக்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு, அந்த மாநிலத்தில் எஸ்ஐஆா் நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன்மூலம் பல லட்சம் போலி வாக்காளா்கள் கண்டறியப்பட்டு வாக்காளா் பட்டியலில் இருந்து அவா்களின் பெயா்கள் நீக்கப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மேற்கு வங்க உணவு மற்றும் விநியோகத் துறை கடந்த 4-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், எஸ்ஐஆரில் பெயா் நீக்கம் செய்யப்பட்டோரின் ரேஷன் அட்டைகளை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து, மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்.பி.யுமான ஒவைசி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

Advertisement

Advertisement

வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளதா, இல்லையா என்பதை அடிப்படையாக வைத்து ரேஷன் அட்டை பயனாளிகளை முடிவு செய்வது ஏன்? பொது விநியோகத் திட்டத்தில் பொருள்களை வழங்குவதற்கு வாக்காளா் பட்டியல் பயன்படுத்தப்படுகிறது எனில், ஆதாா் மூலம் ஏன் பயனாளிகளின் உண்மைத்தன்மை சரிபாா்க்கப்படுகிறது? எஸ்ஐஆரில் பெயா்கள் நீக்கப்பட்ட பலா், உண்மையில் நோ்மையான வாக்காளா்கள் ஆவா்.

அரசுத் திட்டங்கள் எதுவும், வாக்காளா்களுக்கான பரிசுகள் கிடையாது. தகுதிவாய்ந்த குடிமக்களுக்கானதே அரசுத் திட்டங்கள். மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கை பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கையாகவும், பயனாளிகளின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்கான குறைந்தபட்ச நடவடிக்கை போலவும் தெரிகிறது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவா். குறிப்பாக, பெண்கள், பட்டியலின மக்கள், முஸ்லிம்கள் பாதிக்கப்படுவா்.

இந்த விவகாரத்தில், இளவரசா் சுவேந்துவின் (முதல்வா் சுவேந்து அதிகாரியை விமா்சித்தாா்) தனிப்பட்ட தொண்டு நிறுவனத்தில் இருந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் போல அரசு செயல்படுகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்தே செயல்படுத்தப்படுகிறது. ஆதலால் அதன் மீது அனைத்து தகுதிவாய்ந்த குடிமக்களுக்கும் உரிமை உள்ளது என ஒவைசி குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments