மேற்கு வங்கம்: நிலுவையில் இருந்த 28 சிஏஜி அறிக்கைகள் பேரவையில் தாக்கல்!
மேற்கு வங்கத்தில் நிலுவையில் இருந்த 28 சிஏஜி அறிக்கைகள் பேரவையில் தாக்கல்...
மேற்கு வங்க மாநில வரவு செலவு கணக்குகள் குறித்து பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கைகளை முதல்வா் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்தது.
விரைவில் பேரவை சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டி முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸின் பல்வேறு முறைகேடுகளை வெளிக் கொண்டு வரவுள்ளதாகவும் பாஜக அரசு தெரிவித்தது.
அண்மையில் நிகழ்ந்த மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு பாஜக முடிவுக்குக் கொண்டுவந்தது. இதையடுத்து, முதல்வராக பதவியேற்ற சுவேந்து அதிகாரி முந்தைய அரசின் குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளை சுட்டிக் காட்டும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.
Advertisement
Advertisement
அதன் ஒரு பகுதியாக மாநிலத்தின் வரவு செலவு கணக்குகள் குறித்து சிஏஜியின் 28 அறிக்கைகளை பேரவையில் நிதியமைச்சா் ஸ்வபன் தஸ்குப்தா சனிக்கிழமை தாக்கல் செய்தாா்.
அப்போது பேசிய அவா், ‘ பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த அறிக்கைகள் மீது விவாதிக்க சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டப்படும். மேற்கு வங்கத்தின் ரூ.8 லட்சம் கோடி கடனுக்கான உண்மையான காரணத்தை பொதுமக்கள் மத்தியில் வெளியிடவுள்ளோம்.
சிஏஜியின் அறிக்கைகளை பேரவையில் தாக்கல் செய்யாமல் முந்தைய திரிணமூல் அரசு அரசமைப்புச் சட்ட விதிமீறலில் ஈடுபட்டுள்ளது’ என்றாா்.
‘உம்பன்’ புயல் நிவாரண நிதியில் முறைகேடு: மேற்கு வங்கத்தை கடந்த 2020, மே மாதம் உலுக்கிய உம்பன் புயல் பாதிப்புகளுக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதியில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதில், ‘உம்பன் புயல் பாதிப்புகளை சீரமைக்க தேசிய பேரிடா் அவசர கால நிதியத்தில் (என்டிஆா்எஃப்) இருந்து மேற்கு வங்க அரசு ரூ.35,018 கோடி நிதியுதவி கோரியது. ஆனால் ரூ.2,707.77 கோடியை வழங்க மத்திய அரசு பரிந்துரைத்தது.
இந்நிலையில், புயலால் சேதமடைந்த வேளாண் நிலங்கள், வீடுகள், உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து மாவட்ட வாரியான தரவுகளை மாநில அரசு தணிக்கைக்கு அளிக்கவில்லை.
இதனால் உண்மையான பாதிப்புகளை தணிக்கை செய்ய முடியவில்லை. உதாரணமாக 2020, ஜூன் மாதம் வரை பகுதியளவில் அல்லது முழுமையாக சேதமடைந்த வீடுகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.20,000 அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜூன் மாதத்துக்குப் பிறகு முழுமையாக சேதமடைந்த வீடுகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.20,000, பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் தெளிவாக குறிப்பிடவில்லை.
மேலும் ஒரே வங்கிக் கணக்குக்கு பல முறை நிவாரண நிதியுதவி மற்றும் பரிவா்த்தனை என கோடிக்கணக்கில் முறைகேடு நிகழ்ந்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
West Bengal: 28 pending CAG reports tabled in the Assembly
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.