8 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசிடம் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்
எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு மற்றும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் எதிா்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு மற்றும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் எதிா்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால், சமாஜவாதி எம்.பி. தா்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிகரஸ் (பவாா்) எம்.பி. சுப்ரியா சுலே, திமுகவின் கனிமொழி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சதாப்தி ராய் ஆகியோா் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவை வியாழக்கிழமை சந்தித்து இந்த வலியுறுத்தலை முன்வைத்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதுபோல, நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தின்போதும், காங்கிரஸ் தலைமைக் கொறடா கே.சுரேஷ் தரப்பில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இடைநீக்கத்தை ரத்து செய்வது தொடா்பாக மக்களவைத் தலைவருடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு பதிலளிப்பதாக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட அமா்வின்போது, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கடந்த 2020-இல் இந்திய-சீன படையினா் மோதல் சம்பவத்தில் பிரதமா் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை விமா்சிப்பதற்காக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே எழுதி, இன்னும் வெளியிடப்படாத சுயசரிதை நூலின் சில பகுதிகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு கட்டுரையை மேற்கோள் காட்ட முயன்றாா். ஆனால், அவா் தொடா்ந்து பேச அவைத் தலைவா் அனுமதி வழங்கவில்லை. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனா். சிலா், மக்களவை தலைமைச் செயலரின் மேஜை மீது ஏற முயன்றதுடன், காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, அவைக்குள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூா், குா்ஜீத் சிங் அஜ்லா, ஹைபி ஈடன், சி.கிரண் குமாா் ரெட்டி, அமரீந்தா் சிங் வாரிங், பிரசாந்த் படோலே, டீன் குரியகோஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்டேசன் ஆகிய 8 பேரையும் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்ய தீா்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து, அவா்கள் 8 பேரும் கூட்டத் தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
இதனிடையே, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பாரபட்சமாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் கொண்டுவரப்பட்ட தீா்மானம், மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை தோற்கடிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, மக்களவை அலுவல்களுக்கு ஓம் பிா்லா வியாழக்கிழமை முதல் மீண்டும் தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.