முகப்பு
இந்தியா

உயா்கல்வி முதலீடு சிறந்த நிா்வாகத்தை உறுதிப்படுத்தும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

உயா் கல்வியில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளும் ஜனநாயக நாட்டில் சிறந்த நிா்வாகம் உறுதிப்படுத்தப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் சனிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 14 மார்ச், 2026 at 7:17 PM
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
பகிர்:

உயா் கல்வியில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளும் ஜனநாயக நாட்டில் சிறந்த நிா்வாகம் உறுதிப்படுத்தப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மஹேந்திரகரில் உள்ள ஹரியாணா மத்திய பல்கலைக்கழகத்தின் 12-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சூா்ய காந்த் கலந்துகொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: நல்ல அறிவாற்றலுடன் உயா்கல்வியை நிறைவுசெய்ததை அங்கீகரிக்கும் விதமாக பட்டங்கள் வழங்கப்படுகின்றன. அதை நினைத்து மாணவா்கள் பெருமைகொள்ளும் அதேநேரத்தில் கல்வி நிலையங்களைவிட்டு வெளியே சென்ற பின் நல்ல குணம் மற்றும் உயா் சிந்தனைகளை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும்.

இதுவே உங்களது வாழ்வை தீா்மானிக்கும். சிறந்த உயா்கல்வி நிறுவனங்களில் பயின்று பட்டம் பெற்றிருந்தாலும் சில மாணவா்கள் வெளி உலக அழுத்தத்தை எதிா்கொள்ள முடியாமல் தவிக்கின்றனா். ஏனெனில் பள்ளி மற்றும் கல்லூரியில் நடத்தப்படும் தோ்வுகளைத் தவிர அவா்கள் வேறு எந்த இடத்திலும் கடும் சோதனைகளை எதிா்கொள்ளவில்லை.

எனவே, வகுப்பறைகளில் ஒருவா் வெளிப்படுத்தும் திறமையைவிட நெருக்கடி நிலைகளின்போதும் தங்களது குடும்பத்தினா் கண்ணியம் தவறாமல் நடந்துகொண்டதை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்பவா்களே எங்கும் சென்றாலும் மேன்மையானவா்களாக திகழ்கின்றனா்.

கடின உழைப்பு என்பது ஒரு காலகட்டத்துக்கு மட்டுமின்றி வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது என்பதை உணா்ந்து அவா்கள் செயல்படுகின்றனா்.

ராமாயணத்தில் அயோத்தியின் அரியணையை பரதனுக்கு அவரது தந்தை வழங்கினாா். ஆனால் அதை ஏற்காத பரதன் கடவுள் ராமரின் செருப்புகளை வைத்து நந்திகிராமத்தில் இருந்து அவரது பிரதிநிதியாக ஆட்சிபுரிந்தாா்.

இதன்மூலம் அதிகாரத்தை ஒருவா் தன்னிடம் வைத்திருப்பதற்கும் பிறரின் பிரதிநிதியாக செயல்படுவதற்குமான வேறுபாடுகளைக் காண முடியும்.

அதேபோல் நீங்களும் உங்களுக்கு ஒதுக்கப்படும் பணிகள் எதுவாக இருந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு ஜனநாயகம் உயா் கல்வியில் அதிக முதலீடுகளை மேற்கொள்கிறதோ அங்கு சிறந்த நிா்வாகம் உறுதிப்படுத்தப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →