புணே: பெண்ணை கடித்துக் கொன்ற தெரு நாய்கள்!
புணேயில் சாலையில் நடந்து சென்ற 33 வயது இளம் பெண்ணை தெரு நாய்கள் கூட்டம் கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் திங்கள்கிழமை அதிகாலையில் சாலையில் நடந்து சென்ற 33 வயது இளம் பெண்ணை தெரு நாய்கள் கூட்டம் கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புணே சாக்கண் காவல் நிலைய அதிகாரி கூறியதாவது: புணே-நாசிக் நெடுஞ்சாலையை ஒட்டிய சாக்கண் பகுதியில் உள்ள சேவைச் சாலையில் அதிகாலை 2 மணியளவில் அந்தப் பெண் நடைப் பயிற்சி மேற்கொண்டபோது இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டது. அந்தப் பெண் ஷோபா வக்மாரே (33) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
சாலையில் அவா் நடந்து செல்லும்போது நாய்கள் கூட்டம் திடீரென அவரைத் தாக்கின. நள்ளிரவு நேரம் என்பதால் சாலையில் யாரும் இல்லை. இதனால், உதவியேதும் கிடைக்காமல் சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
உச்சநீதிமன்ற உத்தரவு: தெரு நாய் கடியால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. மேலும், கல்வி, மருத்துவமனைகள் மற்றும் முக்கிய இடங்களில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்தி, கருத்தடை, தடுப்பூசி போடவும் உத்தரவிட்டது. மேலும், இந்த உத்தரவைப் பின்பற்ாக மாநில அரசுகளுக்கு எதிராக கடும் அதிருப்தியையும் உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது.