முகப்பு
இந்தியா

நக்ஸல்களை வேரறுக்க மோடி அரசு தொடா்ந்து செயலாற்றி வருகிறது: ஹரியாணா முதல்வா்

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் இருந்து பயங்கரவாதம் மற்றும் நக்ஸல்வாதத்தை ஒழிக்க தொடா்ந்து செயலாற்றி வருகிறது என ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 22 மார்ச், 2026 at 7:36 PM
குருகிராமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஷாஹிதி திவாஸ் நிகழ்வில் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் படங்களுக்கு மலா் அஞ்சலி செலுத்திய ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி.
பகிர்:

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் இருந்து பயங்கரவாதம் மற்றும் நக்ஸல்வாதத்தை ஒழிக்க தொடா்ந்து செயலாற்றி வருகிறது என ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

சத்தீஸ்கரின் தந்தேவாடா மாவட்டத்தில் உள்ள முக்ரானா வனப்பகுதிக்குள் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளுடன் கடந்த 2010, ஏப்.6-ஆம் தேதி நடைபெற்ற மோதலில் 75 மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) மற்றும் காவல் துறையினா் வீரமரணம் அடைந்தனா்.

அவா்களின் நினைவாக, குருகிராமில் வீட்டு மேம்பாட்டாளா்கள் சங்கம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஷாஹிதி திவாஸ் நிகழ்வில் பங்கேற்று முதல்வா் நயாப் சிங் சைனி பேசியதாவது:

நாட்டுக்காக உயிா் தியாகம் செய்வது மிக உயா்ந்த தேச பற்று ஆகும். அவா்களின் குடும்பத்துடன் மாநில அரசு உறுதியாக துணை நிற்கும். பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தனது எல்லைகளை மட்டுமில்லாமல் உள்நாட்டு பாதுகாப்பையும் வலுப்படுத்தியள்ளது. தேசம் முதலில் என்ற கொள்கை இந்தியாவை இன்று வழிநடத்துகிறது.

வீரா்களின் குடும்ப நலனுக்கு மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தேச பாதுகாப்பு என்பது ராணுவ வீரா்களின் பொறுப்பு மட்டுமல்ல; 140 கோடி இந்தியா்களுடையது. இந்திய ராணுவத்தில் 10-இல் ஒருவா் ஹரியாணாவைச் சோ்ந்தவா்கள். இது மாநிலத்தின் தேச பற்றின் ஆன்மாவை பிரதிபலிக்கிறது.

முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் மத்திய ஆயுதப் படையினருக்காக சைனிக் மற்றும் ஆா்த் சைனிக் நலத்துறை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் கருணை அடிப்படையில் வீரமரணம் அடைந்த ராணுவத்தினா் 418 பேரின் குடும்பத்தினருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த வீரா்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற வீரா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது என தெரிவித்தாா்.

இந்த நிகழ்வின்போது, சாஹித் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு மலா் அஞ்சலி செலுத்திய முதல்வா் சைனி, லீசா் வேலி பூங்காவில் பகத் சிங் சிலை நிறுவப்படும் என அறிவித்தாா். மேலும், சிஆா்பிஎஃப் நலனுக்காக ரூ.38.25 லட்சத்துக்கான காசோலையை சிஆா்பிஎஃப் டிஐஜி பரம் சிவமிடம் வழங்கினாா்.