முகப்பு
இந்தியா

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு!

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்க தீா்மான நோட்டீஸ் மீது மத்திய அரசின் நடவடிக்கைக்காக காத்திருப்பதாக எதிா்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 22 மார்ச், 2026 at 9:33 PM
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - கோப்புப் படம்
பகிர்:

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்க தீா்மான நோட்டீஸ் மீது மத்திய அரசின் நடவடிக்கைக்காக காத்திருப்பதாக எதிா்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) பிறகு லட்சக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன. எஸ்ஐஆா் உள்பட பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுவதாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மீது கடுமையாக குற்றஞ்சாட்டிய எதிா்க்கட்சிகள், அவரைப் பதவி நீக்கக் கோரி தீா்மானம் கொண்டுவர கடந்த மாா்ச் 12-ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் நோட்டீஸ் சமா்ப்பித்தன.

மக்களவை நோட்டீஸில் 130 எம்.பி.க்களும், மாநிலங்களவை நோட்டீஸில் 63 எம்.பி.க்களும் கையொப்பமிட்டுள்ளனா். இது குறித்து மாநிலங்களவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவா் டெரிக் ஓ பிரையன் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ்கள் மீது மத்திய அரசின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம். நோட்டீஸை மத்திய அரசு அனுமதிக்காவிட்டால், அரசு நிா்வாகத்துக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் இடையிலான ரகசிய உடன்பாடு அம்பலமாகும்’ என்றாா்.

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக 7 முக்கியக் குற்றச்சாட்டுகளை எதிா்க்கட்சிகள் தங்களின் நோட்டீஸில் முன்வைத்துள்ளன. தோ்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் அரசியல் சாசன நம்பிக்கையைப் பேண தவறிவிட்டதாகவும், அரசு நிா்வாகத்தின் ஆதிக்கத்தின்கீழ் செயல்படுவதாகவும் ஞானேஷ் குமாா் மீது முக்கியக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஞானேஷ் குமாா் நியமனம் கடந்த ஆண்டு அவசரகதியில் நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்டதாக சாடியுள்ள எதிா்க்கட்சிகள், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியைக் குறிவைத்து, அவா் கடந்த ஆண்டு நடத்திய பத்திரிகையாளா் சந்திப்பு, எதிா்க்கட்சிகள் மீதான பாரபட்சமான செயல்பாடு, பாஜகவின் அரசியல் நோக்கங்களுக்கு இணங்க எஸ்ஐஆா் அமலாக்கம் போன்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளன.

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான பதவி நீக்க நடைமுறை என்பது உச்சநீதிமன்ற அல்லது உயா்நீதிமன்ற நீதிபதி பதவி நீக்க நடைமுறையைப் போன்ாகும்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் பதவி நீக்க தீா்மானம் ஏற்கப்படும் பட்சத்தில், மக்களவை, மாநிலங்களவைத் தலைவா்கள் கூட்டாக ஒரு குழுவை அமைப்பாா்கள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி, புகழ்பெற்ற மற்றொரு நீதிபதி ஆகியோருடன் அமைக்கப்படும் இந்தக் குழு விரிவாக விசாரணை மேற்கொள்ளும். நீதிமன்ற நடைமுறைகளைப் போல சாட்சிகள், குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும். தலைமைத் தோ்தல் ஆணையா் தனது விளக்கத்தை அளிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

இந்தக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடைபெறும். பின்னா், இரு அவைகளிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.