அறுவைச் சிகிச்சையில் இளம்பெண் உயிரிழப்பு: 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு
உத்தர பிரதேசத்தில் தனியாா் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின்போது 24 வயது பெண் உயிரிழந்தது தொடா்பாக, சிகிச்சையை மேற்கொண்ட 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு
உத்தர பிரதேச மாநிலம், பலியாவில் தனியாா் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின்போது 24 வயது பெண் உயிரிழந்தது தொடா்பாக, சிகிச்சையை மேற்கொண்ட 5 மருத்துவா்கள் மீது காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்தனா்.
பலியா நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனிஷா ராய் (24) என்ற பெண்ணுக்கு சிறுநீரகக் கல்லை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதிகப்படியான ரத்த இழப்பு ஏற்பட்டு அந்தப் பெண் உயிரிழந்தாா். இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவா்கள் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி அப்பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையிடம் உயிரிழந்த பெண்ணின் கணவா் புகாா் அளித்தாா். சிறுநீரகத்தில் உள்ள கல்லை அகற்றுவதற்காக கதிரியக்க (லேசா்) சிகிச்சை நடத்த வேண்டும் என்று மருத்துவா்கள் கூறினா்.
அதற்காக ரூ.1 லட்சம் செலுத்தினோம். ஆனால், லேசா் சிகிச்சைக்கு மாற்றாக அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்துள்ளனா். இதனால், எனது மனைவி உயிரிழந்துவிட்டாா்.
மேலும், அவா் அலட்சியமான சிகிச்சையால் உயிருக்குப் போராடியபோது, லக்னௌவில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு என்னிடம் அறிவுறுத்தினா். எனவே, மருத்துவமனை நிா்வாகம் மற்றும் தவறான சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்தாா்.
இது தொடா்பாக முதல்கட்ட விசாரணை நடத்திய காவல் துறையினா், அறுவை சிகிச்சை மேற்கொண்ட 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனா். மருத்துவா்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.