முகப்பு
இந்தியா

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு: 12 பேரைக் கைது செய்தது ஆந்திர காவல் துறை

பல்வேறு மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேரை ஆந்திர மாநில போலீஸôர் கைது செய்துள்ளனர்.

Updated On : 25 மார்ச், 2026 at 11:54 PM
கைது - பிரதிப் படம்
பகிர்:

பல்வேறு மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேரை ஆந்திர மாநில போலீஸôர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக உளவுத்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில் "ஆந்திரம், பிகார், தில்லி, கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த நபர்களைக் கைது செய்ய காவல் துறை சார்பில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆந்திரத்தில் மூன்று பேர் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் 12 பேர் கைது செய்யப்பட்டனர்' என்றார்.

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக ஆந்திரத்தில் கைதானவர்கள் விஜயவாடாவைச் சேர்ந்த முகமது ரஹ்மதுல்லா ஷெரீஃப், மிர்சா சோஹைல் பேக், முகமது டேனிஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மூவரும் பயங்கரவாதச் சிந்தனையைப் பரப்பும் பணியிலும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் செயல்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்ததாக போலீஸôர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அல்}காய்தா மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது போலீஸôரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைதான மூவரும் இந்தியாவுக்கு எதிரான போரில் ஈடுபடுவது என்ற கருத்துருவாக்கத்தை நோக்கி செயல்பட்டு வந்துள்ளனர். இதற்காக இவர்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.

ஆந்திரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ரஹ்மதுல்லா பைக் டாக்சி ஓட்டுநராக செயல்பட்டு வந்தார். சர்வதேச அளவிலான பயங்கரவாதத் தலைவர்களில் வெறுப்பூட்டும் பேச்சுகளால் ஈர்க்கப்பட்ட அவர் சமூக வலைதளங்களில் பயங்கரவாதச் சிந்தனையைப் பரப்பினார்.

அவர் சமூக வலைதளம் மூலம் வெளிநாட்டைச் சேர்ந்த அல்}ஹக்கீம் ஷுகுர் என்ற பயங்கரவாதத் தலைவருடன் தொடர்பு கொண்டிருந்தார். ஷுகுரின் ஆலோசனைப்படி ஹைதராபாதைச் சேர்ந்த ஷாத்மான் தில்குஷ் மற்றும் சைதா பேகம் ஆகியோருடன் இணைந்து ரஹ்மதுல்லா செயல்பட்டு வந்தது போலீஸôரின் விசாரணையில் தெரியவந்தது.

ஆந்திரத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் அல்}காய்தா அமைப்பின் மறைந்த தலைவர் பின்லேடனின் விடியோக்களை பார்த்து வந்ததுடன் பின்லேடனைப் போன்றே உடைகளையும் அணிந்து வந்தனர்.

அவர்கள் தங்களது சமூக ஊடகப் பதிவுகளில் இந்திய தேசியக் கொடிக்குப் பதிலாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியை பதிவு செய்திருந்தனர். இஸ்லாமிய மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் கருத்துகளை அவர்கள் பரப்பி வந்தனர்.

இன்னும் ஒரு மாதத்தில் அவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று பயங்கரவாதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்ததும் தற்போது அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு மேலும் வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸôர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.